5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு


5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறியவரா உங்களுக்கு நன்மை செய்வார்? தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு
x
தினத்தந்தி 13 May 2019 11:45 PM GMT (Updated: 13 May 2019 9:35 PM GMT)

5 ஆண்டுகளில் 3 கட்சிகள் மாறிய தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜியா உங்களுக்கு நன்மை செய்வார்? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

அரவக்குறிச்சி,

அரவக்குறிச்சி சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து தொகுதிக்குட்பட்ட வேஞ்சமான்கூடலூர், குறும்பப்பட்டி, எனகனூர், பள்ளப்பட்டி ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

ஜெயலலிதாவால் அடையாளம் காணப்பட்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக வெற்றிபெற்று, அமைச்சராக பதவி வகித்தவர் செந்தில்பாலாஜி. இவர், தி.மு.க.வில் தன்னை இணைத்துக்கொண்டு தற்போது போட்டியிடுகிறார். கடந்த 5 ஆண்டுகளில் 3 கட்சிக்கு மாறியவர் செந்தில்பாலாஜி.

தன்னை எம்.எல்.ஏ. மற்றும் அமைச்சராக்கி அரசியலில் ஒரு அடையாளம் தந்த அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்ய எண்ணும் செந்தில்பாலாஜியா, சாதாரண மக்களுக்கு நன்மை செய்யப்போகிறார்? கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு வாக்காளர்களை சந்தித்து நன்றிகூட தெரிவிக்காதவர் செந்தில்பாலாஜி. இப்படிப்பட்டவர் தான் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆசியோடு போட்டியிடுவதாக கூறுகிறார்.

ஏமாற்று வேலை

மு.க.ஸ்டாலின் 2013-ம் ஆண்டு சட்டசபையில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி மீது ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார். அதில் போக்குவரத்துத் துறையில் ஊழல் செய்ததாக செந்தில்பாலாஜியை கடுமையாக விமர்சனம் செய்தார். ஆள்கடத்தல் பேர் வழி என குறிப்பிடப்பட்ட அதே செந்தில்பாலாஜியை தான், தற்போது நல்லவர், வல்லவர், திறமையானவர் என மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்துவருகிறார்.

இந்த தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு 3 செண்ட் நிலம் தருவேன் என மு.க.ஸ்டாலின் கூறுகிறார். 2 ஏக்கர் நிலம் தருவதாக கூறிய கருணாநிதியாலேயே நிலம் வழங்க முடியவில்லை. 25 ஆயிரம் குடும்பத்துக்கு தலா 3 செண்ட் நிலம் என்றால் மொத்தம் 850 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இந்த பகுதியில் அந்த அளவுக்கு நிலம் இருக்கிறதா? இவரால் எப்படி வழங்க முடியும்? இதெல்லாமே ஏமாற்று வேலை.

அரசியல் நாடகம்

இதுபோன்ற கவர்ச்சி திட்டங்களை அறிவித்து மக்களை திசைதிருப்பி, வாக்குகளைப் பெற முயற்சி செய்கிறார். இது அரசியல் நாடகம். எனவே, வாக்காளர்கள் நன்கு சிந்தித்து அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். முதல்-அமைச்சர் என்ற முறையில் நான் அறிவிக்கின்ற அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும். ஆனால் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர். அவர் அளிக்கும் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்ற முடியாது.

யார் மக்களுக்காக உழைக்கக் கூடியவர்கள்? யார் பண்பாளர்கள்? என்பதை எடைபோட்டு பார்த்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட பள்ளப்பட்டி ஷா நகரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

சந்திரசேகர ராவுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சிறுபான்மையின மக்களுக்கு எப்போதும் பாதுகாப்பாக இந்த அரசு இருக்கிறது. முஸ்லிம்களின் கோரிக்கைகளை நிலைநாட்டுகிற, நிறைவேற்றுகிற அரசு இந்த அரசு. தேர்தல் நேரத்தில் கூட்டணி என்பது வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்பதாகும். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. எங்களது கொள்கையில் இருந்து என்றும் மாறுபட மாட்டோம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கடைபிடித்த கொள்கைகளை தொடர்ந்து நாங்கள் கடைபிடிப்போம். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் அறிவித்தவர் மு.க.ஸ்டாலின் தான். தேர்தல் இன்னும் முடியவில்லை. வாக்கு எண்ணிக்கை கூட நடந்து முடியவில்லை. ஆனால் சந்திரசேகர ராவை மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். தேர்தல் முடிவதற்குள்ளே ஸ்டாலின் வேறு திசையில் செல்கிறார். ஆனால் நாங்கள் அப்படி இல்லை. சொன்னதை செய்வோம். செய்வதை தான் சொல்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

பள்ளப்பட்டி ஷாநகரில் எடப்பாடி பழனிசாமிக்கு அங்கிருந்த முஸ்லிம் பெண்கள் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்து, பூங்கொத்து கொடுத்தனர். முஸ்லிம்கள் அணியும் தொப்பியை அவர் அணிந்து கொண்டார்.

Next Story