மாநில செய்திகள்

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு1¼ மணி நேரம் முக்கிய ஆலோசனை + "||" + Telangana Chief Minister Chandrasekhar Rao Meeting with MK Stalin

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு1¼ மணி நேரம் முக்கிய ஆலோசனை

தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ்சென்னையில் மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு1¼ மணி நேரம் முக்கிய ஆலோசனை
3-வது அணி அமைப்பது தொடர்பாக, தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 1¼ மணி நேரம் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
சென்னை,

நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதியுடன் முடிவடைந்து, 23-ந் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

ஆட்சி அமைப்பது யார்?

இந்த தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா தலைமையில் ஓர் அணியும், காங்கிரஸ் தலைமையில் மற்றொரு அணியும் மோதுகின்றன. மற்ற கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுகின்றன.

நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கூட்டணியோ அல்லது காங்கிரஸ் கூட்டணியோ வெற்றி பெற்றால் மத்தியில் புதிய அரசு அமைவதில் பிரச்சினை இருக்காது. ஆனால் தனிப்பட்ட முறையில் எந்த கட்சிக்கோ அல்லது அணிக்கோ பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனால் தொங்கு பாராளுமன்றம் ஏற்படும். அப்போது யார் ஆட்சி அமைப்பது என்பதில் பிரச்சினை ஏற்படும்.

3-வது அணி

இதை கருத்தில் கொண்டு, பாரதீய ஜனதா, காங்கிரஸ் அல்லாத கட்சிகளை ஓரணியில் திரட்டி 3-வது அணி ஒன்றை அமைக்கும் முயற்சியில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவரும், தெலுங் கானா முதல்-மந்திரியுமான சந்திரசேகர ராவ் மும்முரமாக ஈடுபட்டு உள்ளார்.

இது தொடர்பாக அவர் கொல்கத்தா சென்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜியை சந்தித்து பேசினார். சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கேரள முதல்-மந்திரியுமான பினராயி விஜயனை திருவனந்தபுரத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

மு.க.ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் சந்திப்பு

இந்த நிலையில் நேற்று அவர், காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

ஏற்கனவே தமிழகம் வந்திருந்த சந்திரசேகர ராவ், நேற்று காலை ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருச்சியில் இருந்து சென்னை வந்த அவர், விமான நிலையத்தில் இருந்து காரில் ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கு மாலை 4.25 மணிக்கு சென்றார்.

அங்கு அவரை வாசலுக்கு வந்து மு.க.ஸ்டாலின் வரவேற்றார். அப்போது, மு.க.ஸ்டாலினுக்கு சந்திரசேகர ராவ் மலர் கொத்து கொடுத்தார்.

பின்னர் சந்திரசேகர ராவை வீட்டுக்குள் அழைத்துச் சென்ற மு.க.ஸ்டாலின் அவருக்கு பொன்னாடை போர்த்தி, மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சிறிய அளவிலான வெண்கல சிலை ஒன்றை நினைவுப் பரிசாக வழங்கினார். தனது மனைவி துர்கா ஸ்டாலினையும் அறிமுகம் செய்து வைத்தார்.

இந்த சந்திப்பின் போது தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

1¼ மணி நேரம் முக்கிய ஆலோசனை

மாலை 5.40 மணி வரை சுமார் 1¼ மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? மத்தியில் அமைய இருக்கும் ஆட்சியில் மாநில கட்சிகளின் பங்கு என்னவாக இருக்கும்? என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங் கள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது.

அப்போது, மத்தியில் பாரதீய ஜனதாவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம் என்றும், மாநில கட்சி தலைவர்களில் ஒருவர் பிரதமராக பதவி ஏற்கலாம் என்றும், அதற்கு தி.மு.க. ஆதரவு அளிப்பதோடு மந்திரி சபையிலும் முக்கிய அங்கம் வகிக்க வேண்டும் என்றும் சந்திரசேகர ராவ் கேட்டுக்கொண்டதாக தெரிகிறது.

அதற்கு மு.க.ஸ்டாலின், மத்தியில் காங்கிரசால் மட்டுமே நிலையான ஆட்சியை தர முடியும் என்பதால், மாநில கட்சிகள் அனைத்தும் காங்கிரசுடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதே சிறந்ததாக இருக்கும் என்றும், எனவே காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டதாக கருதப்படுகிறது.

குமாரசாமி

மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய சந்திரசேகர ராவ் பின்னர் மாலை 6.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் புறப்பட்டு சென்றார்.

அவர் அடுத்ததாக மதசார்பற்ற ஜனதாதள தலைவரும், கர்நாடக முதல்-மந்திரியுமான குமாரசாமியை சந்தித்து 3-வது அணிக்கு ஆதரவு திரட்ட இருக்கிறார்.