பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்


பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள்
x
தினத்தந்தி 14 May 2019 3:58 PM IST (Updated: 14 May 2019 3:58 PM IST)
t-max-icont-min-icon

சீரான முறையில் வழங்கப்பட்டு வரும் பாதுகாக்கப்பட்ட குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண் இயக்குனர் சி.என்.மகேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பொதுமக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க 556 கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் தற்போது பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களின் மூலமாக 4 கோடியே 23 லட்சம் மக்கள் தினமும் பயன்பெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த திட்டங்களின் மூலம் நாளொன்றுக்கு 2 ஆயிரத்து 146 மில்லியன் லிட்டர்கள் குடிநீர் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்சமயம், தமிழ்நாட்டின் மழை அளவு, வழக்கத்தை விட 69 விழுக்காடு குறைந்துள்ளதால், இந்த வருடம் சராசரியாக ஆயிரத்து 856 மில்லியன் லிட்டர்கள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் குடிநீரானது கடைக்கோடி குடியிருப்புகள் வரை சென்றடைவதை உறுதிபடுத்திக்கொள்ள, தமிழகம் முழுவதும் வாரியத்தின் மூலம் 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் கசிவு, மின் மோட்டார் பழுது ஆகியவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர், போன்றவை குறித்து 94458 02145 என்ற அலைபேசி எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.

குடிநீர் வடிகால் வாரியத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும், குடிநீர் தரப் பரிசோதனை கூடம் உள்ளதாகவும், அதில் பொதுமக்கள் குடிநீரின் தரத்தை பரிசோதனை செய்து கொள்ளலாம். 

கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழகத்தில் 960 மில்லி மீட்டர் பெய்ய வேண்டிய மழை 811.7 மில்லி மீட்டர் மட்டுமே பெய்ததாகவும், 2019 ஜனவரி முதல் மே வரை 108 மில்லி மீட்டர் பொழிய வேண்டிய மழை, 34 மில்லி மீட்டர் மட்டுமே பொழிந்துள்ளது.

தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறைகளை செயல்படுத்த தேவையான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வருவதாகவும் கூறியுள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், குடிநீரை பொதுமக்கள் அனைவரும் சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.

Next Story