கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் ரூ.65 கோடி கடன் தள்ளுபடி எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
2017-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பு பெறப்பட்ட கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களின் ரூ.65 கோடி கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
கோவை,
சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் வி.பி.கந்தசாமியை ஆதரித்து கோவை மாவட்டம் சின்னியம்பாளையம், முத்துக்கவுண்டன்புதூர், வாகராயம்பாளையம் ஆகிய இடங்களில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
கைத்தறி நெசவாளர்களுக்கு 250 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 750 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் மாநிலம் தமிழ்நாடு. விசைத்தறி தொழிலில் ஈடுபட்டுள்ள நெசவாளர்களின் நலன் காக்கும் வகையில் சிறு, குறு விசைத்தறியாளர்கள் 31.3.2017-க்கு முன்பு பெற்ற மூலதனக் கடன் தொகை ரூ.65 கோடி தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போன்று கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், நெசவாளர் வீடு கட்டும் கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் வீடு கட்ட பெற்ற கடன் தொகை, வட்டி, அபராத வட்டி முழுவதும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நிச்சயம் நிறைவேற்றுவோம்
தற்போது சட்டமன்றத்தில் 88 தி.மு.க. உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் யாரும் என்னை சந்தித்து தொகுதி மக்கள் சார்பாக எந்த கோரிக்கையும் வைத்தது இல்லை. அவ்வாறு இருக்கையில் அந்த தொகுதிக்கு அவர்களால் என்ன செய்ய முடிந்தது என்பதை நீங்கள் சிந்தித்து பார்க்க வேண்டும்.
தி.மு.க. பொய்யான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களை குழப்பி அதன் மூலம் வாக்குகளை பெற நினைக்கிறது. அது ஒரு போதும் நடக்காது. அ.தி.மு.க. சார்பில் அளிக்கப்படும் அனைத்து வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
டி.டி.வி.தினகரன் சதி
டி.டி.வி.தினகரன் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதன் காரணமாக ஜெயலலிதாவால் கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர். தற்போது புதிதாக ஒரு கட்சியை ஆரம்பித்து, மக்கள் செல்வாக்கு இருப்பது போல காட்டி கொண்டிருக்கிறார். எந்த சின்னத்தில் அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றாரோ, அந்த சின்னமான ‘இரட்டை இலை’ சின்னத்தை முடக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர். கட்சியை உடைக்கவும், ஆட்சியை கலைக்கவும் பல்வேறு வகையில் அவர் சதி செய்தார்.
18 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அ.தி.மு.க.வில் இருந்து பிரித்து, அவர்களை தகுதிநீக்கம் செய்ய காரணமாக இருந்தவர் டி.டி.வி.தினகரன். கட்சிக்கு துரோகம் செய்த டி.டி.வி.தினகரன் இந்த தேர்தலோடு விரட்டியடிக்கப்பட வேண்டும். தி.மு.க.வும், அ.ம.மு.க.வும் ரகசிய உடன்பாடு வைத்து கொண்டு செயல்பட்டு வருகிறார்கள்.
இரட்டை நிலைப்பாடு
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தி என அறிவித்தார். ஆனால் தற்போது தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர ராவை சந்தித்து பேசுகிறார். ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு. ஏற்கனவே மக்களால் தீர்ப்பு எழுதப்பட்டு விட்டது. அதன் முடிவு 23-ந் தேதி அனைவருக்கும் தெரியவரும்.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டு 304 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு ரூ.3 லட்சத்து 431 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலம் 5 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும், 5 லட்சம் பேருக்கு நேரடியாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில் தொடங்குவதற்கு உகந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது.
அ.தி.மு.க.வை சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் அவர்கள் மீது ஆதாரத்துடன் புகார் மனு சட்டப்பேரவை தலைவரிடம் அளிக்கப்பட்டது. உடனே தி.மு.க.வினர் சட்டப்பேரவை தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வருகிறார்கள்.
அ.தி.மு.க. வெற்றி பெறும்
தி.மு.க.வுக்கும், அந்த 3 எம்.எல்.ஏ.க்களுக்கும் தொடர்பு இருப்பது வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு டி.டி.வி.தினகரன் மூலமாக மு.க.ஸ்டாலின் முயற்சி செய்கிறார். அந்த முயற்சி ஒருபோதும் பலிக்காது. 22 சட்டமன்ற தொகுதியிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story