மாநில செய்திகள்

4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரியுங்கள் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் + "||" + AIADMK Candidates Support Edappadi Palinasamy request

4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரியுங்கள் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

4 தொகுதி இடைத்தேர்தல்: மக்கள் நலத்திட்டங்கள் தொடர அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரியுங்கள் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்
4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
சென்னை, 

மக்கள் நலத்திட்டங்கள் தங்கு தடையின்றி கிடைத்திட 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு பொதுமக்களுக்கு முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

மக்கள் நலத்திட்டங்கள் 

மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெற்று வரும் நல்லாட்சியில் எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

பணிக்கு செல்லும் பெண்களுக்கு மானியத்துடன் இருசக்கர வாகனம், அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் பண்டிகையை சிறப்புடன் கொண்டாடிட பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000, வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள தொழிலாளர்களுக்கு சிறப்பு நிதியுதவி ரூ.2,000 ஆகிய திட்டங்கள் மக்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றுள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம் 

ஜெயலலிதா வழியில் செயல்படும் இவ்வரசு மேற்கொண்ட தொடர் முயற்சிகளினால் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. கொங்கு மண்டல விவசாயிகளின் 60 ஆண்டுகால கோரிக்கையான அத்திக்கடவு–அவிநாசி திட்டம் ரூ.1,652 கோடி மதிப்பில் நிறைவேற்றுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே ரூ.427.76 கோடி மதிப்பில் ஆதனூர்–குமாரமங்கலத்தில் கதவணையும், ரூ.387 கோடி மதிப்பீட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் புதிய கதவணையும் அமைக்கப்பட்டு வருகிறது.

ஜெயலலிதாவால் கொண்டுவரப்பட்ட முதல்–அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், இதுவரை ரூ.2,127.17 கோடி செலவில் 13.90 லட்சம் நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

விலையில்லா பசுக்கள், ஆடுகள் 

பிரதம மந்திரி கிராம சாலைத் திட்டத்தின் கீழ் ரூ.2,066 கோடி மதிப்பில் 1,340 சாலைகள் மற்றும் 61 பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.11,600 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. ரூ.193.63 கோடி செலவில் 87,205 பெண்களுக்கு மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ.252.50 கோடி செலவில் மேலும் 1 லட்சம் பெண்களுக்கு வழங்கப்படும். பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் 3,27,552 வீடுகள் ரூ.5,568.38 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு தாலிக்கு 1,92,119 கிராம் தங்கம் வழங்கப்பட்டுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், பட்டப்படிப்பு அல்லாதவர்களுக்கு ரூ.25,000 உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. ரூ.62.43 கோடி செலவில் 15,661 நபர்களுக்கு விலையில்லா கறவைப் பசுக்களும், ரூ.315.03 கோடி செலவில் 2,45,199 நபர்களுக்கு விலையில்லா ஆடுகளும் வழங்கப்பட்டுள்ளன.

ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம்

மெரினா கடற்கரையில் ரூ.50.8 கோடி செலவில் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை அரசு நினைவில்லமாக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் ரூ.20 கோடியில் நடைபெற்று வருகின்றன. ரூ.2.52 கோடி செலவில் சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம், கடலூர் மாவட்டம், மஞ்சகுப்பத்தில் ராமசாமி படையாச்சியார் நினைவு மண்டபம், தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் பாரத மாதா நினைவாலயம், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இசை மேதை நல்லப்ப சுவாமியின் நினைவாக நினைவுத்தூண் ஆகியவை அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் மட்டும் 12,360 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் ரூ.32,206 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலர்களுக்கு 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரையின்படி திருத்திய ஊதியம் ரூ.14,719 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன் முதலாக தமிழ் நாட்டில், தமிழ் நாடு வணிகர் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. எளிமையான மற்றும் வெளிப்படையான பதிவு நிர்வாகத்திற்கு ஸ்டார் 2.0 திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ஹஜ், ஜெருசலேம் புனித பயணம் 

முஸ்லிம் மக்கள் ஹஜ் புனித பயணம் செல்ல ஆண்டுதோறும் ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3,764 ஹஜ் புனித பயணிகளுக்கு நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

ஹஜ் குழுவிற்கு வழங்கப்படும் நிர்வாக மானியம் ரூ.50 லட்சமாகவும், வக்பு வாரிய நிர்வாக மானியம் ரூ.2 கோடியாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.3 கோடி செலவில் பள்ளிவாசல்கள், தர்காக்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. 600 கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்ள ரூ.1.20 கோடி வழங்கப்பட்டு வருகிறது.

வேண்டுகோள் 

மக்கள் நலனையே குறிக்கோளாக கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காகவே வாழ்ந்த மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வழியில் நடைபெறும் தமிழக அரசு தொடர்ந்து வெற்றி நடை போடவும், அனைத்து மக்கள் நலத்திட்டங்களும் தங்கு தடையின்றி கிடைத்திடவும், வருகின்ற 19–ந் தேதி நடைபெற உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும், அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு எம்.ஜி.ஆரால் கண்டெடுக்கப்பட்ட, ஜெயலலிதாவால் கட்டிக்காக்கப்பட்ட வெற்றிச் சின்னமாம் ‘‘இரட்டை இலை’’ சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு வாக்காளர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.