கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் 10 பேரிடம் விசாரணை


கொழும்பில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் 10 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 16 May 2019 3:45 AM IST (Updated: 15 May 2019 9:47 PM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை

சென்னை விமான நிலையத்தில் கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 10 பேரிடம் விசாரித்து வருகின்றனர்.

ஆண்–பெண்கள் குழு 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தப்பட்டு வருவதாக விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விமான நிலையத்தில் அவர்கள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு விமானம் வந்தது. அதில் ராமநாதபுரம் தொண்டியை சேர்ந்த முகமது கனி (வயது 38) என்பவர் தலைமையில் பெரம்பலூரை சேர்ந்த அப்பாஸ் (41), எஸ்.பி.பட்டிணத்தை சேர்ந்த மைதீன் (51), திருச்சியை சேர்ந்த முகமது ரபீக் (37) ஆகிய ஆண்கள் ஒரு குழுவாகவும், சென்னை மயிலாப்பூரை சேர்ந்த கற்பகம் (45) என்பவர் தலைமையில் திருச்சியை சேர்ந்த ‌ஷமீம் பேகம் (45), நாகூரம்மா (40), கேரளாவை சேர்ந்த ஸ்ரீமதி (41), மதுரையை சேர்ந்த பரமேஸ்வரி (55) ஆகிய பெண்கள் ஒரு குழுவாகவும் வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ரூ.1 கோடி தங்கம் 

இவர்கள் 9 பேர் மீதும் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அனைவரையும் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை.

பின்னர் அனைவரையும் தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் 5 பெண்கள் உள்பட 9 பேரும் தங்களது உள்ளாடைகளுக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 9 பேரிடம் இருந்தும் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ 90 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள்.

கொழும்பு விமானம் 

அதேபோல் கொழும்பில் இருந்து சென்னை வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த சென்னையை சேர்ந்த வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில் அவர் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.9 லட்சம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பில் இருந்து வந்த 10 பேரிடம் இருந்து மொத்தம் ரூ.1 கோடியே 9 லட்சம் மதிப்புள்ள 3 கிலோ 365 கிராம் தங்கத்தை கைப்பற்றிய சுங்க இலாகா அதிகாரிகள், இந்த தங்கத்தை அவர்கள் யாருக்காக கொழும்பில் இருந்து சென்னைக்கு கடத்தி வந்தனர்? என பிடிபட்ட 10 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story