கொடைக்கானலில் வக்கீல்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை
இந்து தீவிரவாதி என சர்ச்சையாக பேசியது தொடர்பாக கொடைக்கானலில் வக்கீல்களுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
சென்னை,
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது தொடர்பாக கமல்ஹாசன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் கமல்ஹாசன் 2 நாட்களாக தங்கியிருந்தார். ஆனால் கட்சி நிர்வாகிகள் யாரையும் அவர் சந்திக்கவில்லை. அப்போது அவர் தன் மீதான வழக்கை எப்படி சமாளிப்பது என்பது குறித்து வக்கீல்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. பின்னர் அவர் மதுரை புறப்பட்டு சென்றார்.
சென்னையில் 3 புகார்கள்
இதனிடையே அய்யா வைகுண்டர் மக்கள் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் வீரமாணிக்கம் சிவா, வக்கீல் தமிழ்வேந்தன், திரு.வி.க.நகர் தொகுதி பா.ஜ.க. பொதுச்செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதேபோல் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம், கவுந்தப்பாடி, திருவண்ணாமலை, வாழப்பாடி, குண்டடம் போலீஸ் நிலையங்கள், சேலம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமல்ஹாசனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என புகார் அளிக்கப்பட்டது.
உருவ பொம்மை எரிப்பு
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே பொன்னேரி பகுதியில் இந்து மக்கள் கட்சியினர் திரண்டு கமல்ஹாசனின் உருவபொம்மையை எரித்து கோஷமிட்டனர். மேலும் கமல்ஹாசனின் உருவப்படத்தை நாயின் வாயில் கவ்வியபடி இருக்கும்படி செய்தனர்.
நாமக்கல் மாவட்ட இந்து முன்னணியினர் பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் கமல்ஹாசன் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர். மேலும் பரமத்தி வேலூர் போலீஸ் நிலையத்தில் கமல்ஹாசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தனர்.
Related Tags :
Next Story