சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளை புறக்கணிக்கக்கூடாது டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளை புறக்கணிக்கக்கூடாது என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிப்பதற்காக ஐகோர்ட்டு நீதிபதிகள் 4 பேரின் பெயர்களை மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. இதன்மூலம் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள அனைத்து நீதிபதி பணியிடங்களும் நிரப்பப்படும் என்பது மகிழ்ச்சியளிக்கிறது. அதேநேரத்தில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் நியமனத்தில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 31 நீதிபதிகள் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 27 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ள நிலையில், காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்பும் நோக்கத்துடன் ஜார்க்கண்ட் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அனிருத்த போஸ், கவுகாத்தி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி போபண்ணா, மும்பை ஐகோர்ட்டு நீதிபதி பி.ஆர்.கவாய், இமாச்சல பிரதேச ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சூர்ய காந்த் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
இவர்களின் திறமை, அனுபவம் மற்றும் அப்பழுக்கற்ற தன்மை குறித்து யாருக்கும் எந்த ஐயமும் இல்லை. மாறாக, இவர்களின் சொந்த ஐகோர்ட்டுகளை சேர்ந்த மூத்த நீதிபதிகள் பலர் ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக இருக்கும் நிலையில், மீண்டும் மீண்டும் அந்த ஐகோர்ட்டு நீதிபதிகளுக்கே சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வாய்ப்பு வழங்குவதை பார்க்கும் போது, தமிழகம் புறக்கணிக்கப்படுகிறதோ என்ற ஐயம் எழுகிறது.
புறக்கணிப்பு
சென்னை ஐகோர்ட்டில் இருந்து கடந்த 5 ஆண்டுகளாக ஒருவர் கூட சுப்ரீம் கோர்ட்டுக்கு பதவி உயர்வில் அனுப்பப்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சென்னை ஐகோர்ட்டை சேர்ந்த நீதிபதி பால்வசந்தகுமாருக்கு அனைத்து தகுதிகளும் இருந்தும் கூட அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி வாய்ப்பு மறுக்கப்பட்டது. அவருக்குப் பின் இப்போதுள்ள சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் பி.சுதாகர், ராமசுப்பிரமணியன், மணிக்குமார், சுப்பையா, சத்யநாராயணா உள்ளிட்ட நீதிபதிகள் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளாக நியமிக்கப்பட தகுதியானவர்கள்.
சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி நியமனத்தில் இந்தியாவின் மூத்த ஐகோர்ட்டுகளில் ஒன்றான சென்னை ஐகோர்ட்டு புறக்கணிக்கப்படும் போக்கு உடனடியாக கைவிடப்படவேண்டும். வரும் ஆகஸ்டு மற்றும் அக்டோபர் மாதங்களில் சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதி பணியிடங்கள் ஏற்படவிருக்கும் நிலையில், அவற்றில் தகுதியான சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு முன்வரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story