இந்துக்கள் பற்றி சர்ச்சை பேச்சு: கமல்ஹாசன், கி.வீரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் தேர்தல் கமிஷனுக்கு ராம கோபாலன் வலியுறுத்தல்
இந்துக்களை பற்றி சர்ச்சையாக பேசிய கமல்ஹாசன், கி.வீரமணி ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராம கோபாலன் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம கோபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கமல்ஹாசன் பேச்சு
தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தபின் சட்டவிரோத செயல்பாடுகளை தடுக்க தேர்தல் அதிகாரியே நேரடியாக நடவடிக்கை எடுக்கலாம் அல்லது சம்பந்தப்பட்ட துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம் என்பது நடைமுறை. கடந்த மாதம் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, இந்துக்களின் தெய்வமான கிருஷ்ணரை தரக்குறைவாக பொது தளத்தில் பேசினார், பேட்டி அளித்தார்.
அதன் தொடர்ச்சியாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அரவக்குறிச்சி தேர்தல் பிரசாரத்தில், சுதந்திர இந்தியாவில் முதல் தீவிரவாதி இந்து, காந்தியை கொன்ற கோட்சே தான் அவர் எனப் பேசினார். இதனை இந்து முன்னணி வன்மையாக கண்டித்து 30 போலீஸ் நிலையங்களில் புகார் கொடுத்துள்ளது. பல இடங்களில் ஆர்ப்பாட்டமும் நடத்தியுள்ளது.
இதுவரை தேர்தல் கமிஷன் எடுத்த நடவடிக்கை என்ன? அப்படியென்றால், தேர்தலில் மத துவேஷத்தை தூண்டும்படி பேசினால் நடவடிக்கை எடுக்காமல் பொது அமைதி கெடுவதை தேர்தல் கமிஷனும், காவல்துறையும் வேடிக்கை பார்க்க நினைக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.
தேர்தல் கமிஷன் நடவடிக்கை...
கமல்ஹாசன் மக்களை திசைதிருப்ப மத பிரிவினையை ஏற்படுத்தி தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி பேசுகிறார். இது தேர்தல் நடத்தை விதிமுறைக்கு எதிரானது. இதுபோல் மற்றவர்களும் பேச ஆரம்பித்தால், தேர்தல் கமிஷனும், காவல்துறையும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்குமா? என்பதே நமது கேள்வி.
மதுரை திருப்பரங்குன்றத்தில் பேசிய கமல்ஹாசன் தனது கருத்தை நியாயப்படுத்தி பேசியிருக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயக வழியில் போராடிய இந்து முன்னணி பொறுப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு கமல்ஹாசன், வீரமணி ஆகியோர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story