மார்ட்டின் உதவியாளர் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு


மார்ட்டின் உதவியாளர் மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 May 2019 3:17 AM IST (Updated: 17 May 2019 3:17 AM IST)
t-max-icont-min-icon

லாட்டரி அதிபர் மார்ட்டின் உதவியாளர் மர்ம மரணம் குறித்து மாஜிஸ்திரேட்டு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது மார்ட்டினிடம் உதவியாளராக வேலை செய்த கோவையை சேர்ந்த பழனிச்சாமியை விசாரணைக்காக அழைத்து சென்றனர். 3 நாட்களுக்கு பின்னர் அவர் கோவை மாவட்டம், வெள்ளியங்காடு கிராமத்தில் உள்ள குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து பழனிச்சாமியின் மகன் ரோஹின்குமார், சென்னை ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் ‘தன் தந்தையின் சாவில் மர்மம் உள்ளதாகவும், அவரது முகத்தில் ரத்த காயம் உள்ளது என்றும் எனவே, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு வழக்கை மாற்ற வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

காயம் எப்படி வந்தது?

மேலும், அந்த மனுவில் ‘தந்தையின் உடலை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்து விட்டனர். எனவே, எனது சார்பில் ஒரு டாக்டர் முன்னிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிட வேண்டும். தந்தையை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றபோது, சாதி பெயரை சொல்லித்திட்டியதால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளை வழக்கில் சேர்க்கவேண்டும்’ என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நேற்றுமுன்தினம் விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், தண்ணீரில் மூழ்கி இறந்தவரின் முகத்தில் எப்படி ரத்த காயம் வந்தது? என்று கேள்வி எழுப்பியதுடன், அதற்கு விளக்கம் அளிக்க போலீஸ் தரப்புக்கு உத்தரவிட்டனர்.

விசாரணை மாற்றம்

இந்தநிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வக்கீல் ஆர்.பிரதாப்குமார், ‘மனுதாரரின் தந்தையின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆர்.டி.ஓ. முன்னிலையில், 6 டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். மேலும், பழனிச்சாமி மர்மச்சாவு தொடர்பான வழக்கு காரமடை போலீசிடம் இருந்து, மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்த வழக்கில், எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைச் சட்டப்பிரிவும் சேர்க்கப்பட்டுள்ளது. பழனிச்சாமி மர்மச்சாவு தொடர்பாக போலீசார் மீதோ, அரசு டாக்டர்கள் மீதோ மனுதாரர் எந்த குற்றச்சாட்டுகளையும் சுமத்தவில்லை. எனவே, இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றத்தேவையில்லை. மறுபிரேத பரிசோதனையும் அவசியமில்லை’ என்று கூறினார்.

பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ‘தண்ணீரில் மூழ்கி இறப்பவர்களின் உடலில் இதுபோன்ற காயங்கள் ஏற்படுவது வழக்கம் தான்’ என்று கூறப்பட்டிருந்தது.

மறுபிரேத பரிசோதனை?

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

மனுதாரரின் தந்தையின் மரணத்தில் மர்மம் உள்ளது என்று சந்தேகம் எழுப்பப்படுகிறது. எனவே, இந்த சம்பவம் குறித்து அனைத்தையும் விசாரணை நடத்த ஒரு மாஜிஸ்திரேட்டை, கோவை மாவட்ட தலைமை மாஜிஸ்திரேட்டு நியமிக்க வேண்டும். அந்த மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்தும்போது, சந்தேகம் ஏற்பட்டால், உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடலாம்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஒரு அரசு டாக்டரை அனுமதிக்க வேண்டும். அதுமட்டுமல்ல, பழனிச்சாமியின் உடலை பார்க்க அவரது குடும்பத்தினருக்கு அனுமதி வழங்கவேண்டும். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story