குற்றவியல் நடைமுறை சட்டப்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்
குற்றவியல் நடைமுறை சட்டப்படி 7 தமிழர்களையும் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சஞ்சய் தத் விடுதலை
மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆயுத சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட நடிகர் சஞ்சய் தத் சட்டத்திற்கு புறம்பான வழிகளில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறார். மத்திய அரசு சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத் தன்னிச்சையாக விடுவிக்கப்பட்டதை கடந்த 3½ ஆண்டுகளாக கண்டு கொள்ளாத மத்திய அரசு, மாநில அரசு சட்டத்தின்படி தண்டனை பெற்ற 7 தமிழர்களின் விடுதலைக்கு மட்டும் முட்டுக்கட்டை போடுவது சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.
ஒருபுறம் மத்திய சட்டப்படி தண்டிக்கப்பட்ட சஞ்சய் தத்தை மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்வதை மத்திய அரசு வேடிக்கைப் பார்க்கிறது. மறுபுறம் மாநில சட்டமான இந்திய தண்டனைச் சட்டத்தின்படி தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்வதற்கான தீர்மானத்தை 2014-ஆம் ஆண்டில் அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா கொண்டு வந்த போது அதை எதிர்த்து அப்போதைய காங்கிரஸ் அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தது. அதனால் தான் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களும் 28 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தும் இன்னும் விடுதலையாக முடியவில்லை.
குற்றவியல் நடைமுறை சட்டம்
இந்தியக் குடிமக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டிய மத்திய அரசு, தகுதியே இல்லாத சஞ்சய் தத்தை விடுதலை செய்வதும், சட்டப்படி அனைத்து தகுதிகளும் இருந்தும் 7 தமிழர்களை விடுதலை செய்ய மறுப்பதும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கவை அல்ல.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161-வது பிரிவின்படி கவர்னர் மூலமாக விடுதலை செய்யவும், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி நேரடியாக விடுவிக்கவும் தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன்படி, 7 தமிழர்கள் விடுதலையில் விரைந்து முடிவு எடுக்கும்படி கவர்னருக்கு தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை ஏற்க மறுத்து விடுதலையை கவர்னர் தாமதம் செய்தால் குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவுகளின்படி 7 தமிழர்களையும் நேரடியாக விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story