தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய தடை ஐகோர்ட்டு உத்தரவு
ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்யும்படி தமிழக அரசுக்கு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
சென்னை,
சர்வசிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், பெருங்களத்தூரில் கஸ்தூரிபாய் காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆசிரியர்களாக பணியாற்றும் இந்திரா காந்தி, இந்திரா, ஜோதி, கவிதா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
அதில், “ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்று கூறி எங்களை பணிநீக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தடை விதிக்கவேண்டும். 2019-ம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவு வெளியாகும் வரை எங்களை பணிநீக்கம் செய்யக்கூடாது” என்று கூறியிருந்தனர்.
பணிநீக்க உத்தரவு
வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார். “தமிழகத்தில் 60 ஆயிரம் ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டு, வேலைக்காக காத்திருக்கின்றனர். ஆனால், மனுதாரர்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தும், தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்” என்று கூறினார்.
மேலும், “தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடரக்கூடாது. அவர்களை பணிநீக்கம் செய்யவேண்டும். இதற்காக அவர்களுக்கு 2 வாரத்துக்குள் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவேண்டும். அவர்கள் தரும் விளக்கத்தின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கடந்த மாதம் உத்தரவிட்டார்.
தடை விதிப்பு
இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். அதில், “தமிழகத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட 9 ஆண்டுகளில் இதுவரை 4 முறை மட்டுமே தகுதித்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால் ஆண்டுக்கு 2 தேர்வுகள் வீதம் மொத்தம் 18 தேர்வுகள் நடத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும், ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக, மற்ற மாநிலங்களை போல தெளிவான அரசாணையை தமிழக அரசு இதுவரை பிறப்பிக்கவில்லை. இந்த சூழலில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் பணியில் தொடரக்கூடாது என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர், “தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் ஜூன் மாதம் நடைபெறவுள்ள தகுதித்தேர்வில் பங்கேற்று தேர்வு எழுத வேண்டும். அந்த தேர்வு முடிவு வெளியாகும் வரை அவர்கள் மீது பணிநீக்க நடவடிக்கை எடுக்கக்கூடாது” என்று கூறி தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்தனர். வழக்கு விசாரணையை ஜூன் 2-வது வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
Related Tags :
Next Story