மாநில செய்திகள்

போலி பி.எச்டி. பட்டம்:அரசு கல்லூரி பேராசிரியர்கள் 11 பேர் பணி இடைநீக்கம் + "||" + 11 college professors suspended

போலி பி.எச்டி. பட்டம்:அரசு கல்லூரி பேராசிரியர்கள் 11 பேர் பணி இடைநீக்கம்

போலி பி.எச்டி. பட்டம்:அரசு கல்லூரி பேராசிரியர்கள் 11 பேர் பணி இடைநீக்கம்
போலி பி.எச்டி. சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த அரசு கல்லூரி பேராசிரியர்கள் 11 பேரை பணி இடைநீக்கம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சென்னை,

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக்கல்லூரிகளில் பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியில் சேர பி.எச்டி. (ஆராய்ச்சி பட்டம்) முடித்து இருக்க வேண்டும். பி.எச்டி. முடிக்காதவர்கள் மாநில தகுதித்தேர்வு (செட்) அல்லது தேசிய தகுதித்தேர்வு (நெட்) ஆகிய ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு கலைக்கல்லூரிகளில் பி.எச்டி. போலி சான்றிதழ் கொடுத்து 11 பேராசிரியர்கள் பணியில் சேர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை கல்லூரி கல்வி இயக்குனர் பணி இடைநீக்கம் செய்துள்ளார். இந்த சம்பவம் உயர்கல்வித்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சான்றிதழை சரிபார்க்க உத்தரவு

பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பேராசிரியர்கள் மேகாலயா, ராஜஸ்தான், பீகார் போன்ற மாநிலங்களில் உள்ள பல்கலைக்கழகங்களில் பி.எச்டி. பட்டம் பெற்றது போன்று சான்றிதழ் அளித்துள்ளனர். விசாரணையில், அந்த பெயரில் பல்கலைக்கழகங்களே இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதேபோன்று 50-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் போலி பி.எச்டி. சான்றிதழ் கொடுத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பணியில் சேர்ந்து இருக்கலாம் என கல்லூரி கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதைத்தொடர்ந்து அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்களின் அனைத்து கல்வி சான்றிதழ்களையும் சரிபார்க்க கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கடுமையாக இல்லை

இந்த விவகாரம் குறித்து பல்கலைக்கழக ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது;-

ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் உதவி பேராசிரியர்கள் 2 பேர் போலியான பி.எச்டி. சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது கடந்த ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஒருவர் ராஜஸ்தானில் உள்ள வீர் ரன்வீர் பல்கலைக்கழகத்திலும், மற்றொருவர் மேகாலயா பல்கலைக்கழகத்திலும் பி.எச்டி. பட்டம் பெற்றதாக போலியாக சான்றிதழ் கொடுத்துள்ளனர்.

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தவர்கள் மீது கல்லூரி கல்வி இயக்ககம் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை. அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டபோதிலும் அரசிடம் இருந்து பாதி சம்பளம் பெற்று வருகின்றனர்.

மோசடியை தடுக்க வேண்டும்

அரசு உதவிபெறும் கல்லூரியில் போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்துள்ள பேராசிரியர்களையும் பணி இடைநீக்கம் செய்ய வேண்டும்.

இதுபோன்ற மோசடிகளை தடுக்க பி.எச்டி. பட்டத்துக்கென்று மத்திய, மாநில அரசுகள் தனியாக ‘கியூ.ஆர்.’ குறியீடு முறையை அறிமுகப்படுத்த வேண்டும். இதன்மூலம் சான்றிதழை ஸ்கேன் செய்யும்போது பல்கலைக்கழக மானியக்குழு வலைத்தளத்தில் அந்த சான்றிதழின் உண்மைத்தன்மையை அறிந்துகொள்ள முடியும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ்

இதேபோன்று ஆசிரியர் பயிற்சி தேர்வில் அதிக மதிப்பெண் வழங்கி முறைகேட்டில் ஈடுபட்ட 300 ஆசிரியர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

தமிழகத்தில் உள்ள 362 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் படித்துவரும் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்களுக்கு கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தேர்வு நடைபெற்றது. 15 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினர்.

இதில், 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஒற்றை இலக்கத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றபோதிலும் முறைகேடாக அவர்களுக்கு தேர்ச்சிக்கான 50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பது அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு தெரியவந்தது.

7 முதல் 10 மதிப்பெண்

ஏராளமானவர்கள் 50 மதிப்பெண்கள் பெற்றதால் சந்தேகப்பட்டு அவர்களின் விடைத்தாள்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது தான் 7 முதல் 10 மதிப்பெண்கள் பெற்ற 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு 50 மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துக்கு (எஸ்.சி.இ. ஆர்.டி.) நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. அதன்படி, 300 ஆசிரியர்களுக்கு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

ஓய்வூதிய பலன்கள்

இதுபற்றி அதிகாரி ஒருவர் கூறும்போது, “இவர்களில் 188 பேர் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும், 112 பேர் தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ஓய்வுபெற உள்ளதால் அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர்களது ஓய்வூதிய பலன்கள் நிறுத்திவைக்கப்படும். தனியார் ஆசிரியர்கள் பணியை இழக்க நேரிடும்” என்றார்.