ஊட்டியில் 123–வது மலர் கண்காட்சி தொடங்கியது
ஊட்டியில் இன்று (மே 17), மலர் கண்காட்சி தொடங்கியது.
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கோடை விழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பாரம்பரியம்மிக்க 123–வது மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கியது. உலக புகழ்பெற்ற மலர் கண்காட்சியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கிவைத்தார்.
கோடை சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஊட்டியில் மலர் கண்காட்சி 5 நாட்கள் நடைபெறுகிறது. இதை கண்டு ரசிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருவார்கள் என கூறப்படுகிறது.
கண்காட்சிக்கு வரும் சுற்றுலா பயணியரை கவர, தாவரவியல் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.பூங்காவின் பெரணி இல்லம் அருகே, கார்னேஷன் மலர்களால், பார்லிமென்ட் வடிவம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு, 2 லட்சம் மலர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஊட்டியில் மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குவதையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவை, மேட்டுப்பாளையம், மதுரை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர ஏதுவாக 63 சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கூட்டம் அதிகரித்தால் கோவை, திருப்பூர், சேலம் டெப்போக்களில் இருந்து கூடுதலாக பஸ்கள் ஊட்டிக்கு இயக்கப்படும். மலர் கண்காட்சி முடியும் வரை சிறப்பு பஸ்கள் சுற்றுலா பயணிகளுக்காக இயக்கப்படுகிறது.
Related Tags :
Next Story