எம்.பி ஆவதற்கு முன்னே கல்வெட்டில் பெயர்: துணை முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - தங்க தமிழ்செல்வன்
ரவீந்திரநாத் குமார் மக்களவை உறுப்பினர் என எழுதப்பட்ட கல்வெட்டை அகற்ற துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தி உள்ளார்.
தேனி,
தமிழகத்தில் வேலூர் தொகுதியை தவிர்த்து 38 மக்களவை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 18-ம் தேதி நடைபெற்றது. தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டுள்ளார். அவரை எதிர்த்து அமமுக சார்பில் தங்க தமிழ்செல்வன் களத்தில் உள்ளார்.
நாளை மறுநாள் மீதமுள்ள அரவக்குறிச்சி உள்ளிட்ட 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து, மே 23-ம் தேதிதான் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 22 சட்டமன்ற தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
வாக்குகள் எண்ணப்படவில்லை, முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. ஆனால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனான ரவீந்திரநாத் எம்.பி ஆகிவிட்டார்.
அதாவது, ரவீந்திரநாத் பெயருடன் தேனி பாராளுமன்ற உறுப்பினர் என பொறிக்கப்பட்ட அடிக்கல், குச்சனூரில் இடம்பெற்றுள்ளது. காசி அன்னபூரணி ஆலயத்துக்கு பேருதவி புரிந்ததாக கடந்த 16-ம் தேதியிட்டு ஓ.பன்னீர்செல்வம், ரவீந்திரகுமார், ஜெயபிரதீப் குமார் ஆகிய பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் தேனி குச்சனூர் கோயிலில் துணை முதலமைச்சர் மகன் ரவீந்திரநாத்குமார் எம்.பி. என்று உள்ள நன்கொடையாளர் கல்வெட்டை அகற்ற வேண்டும் என்றும், தனியார் கோயில் சார்பில் நன்கொடையாளர் வழங்கிய கல்வெட்டை அகற்ற துணை முதல்வர் ஓபிஎஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி தொகுதி அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன் வலியுறுத்தி உள்ளார். அவரை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரும் வலியுறுத்தி உள்ளனர்.
Related Tags :
Next Story