திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம்
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
தூத்துக்குடி,
முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான வைகாசி விசாகத் திருவிழா மிகவும் சிறப்புமிக்கதாகும். திருச்செந்தூர் கோயிலில் இத்திருவிழா, வசந்த விழாவாக கடந்த 9-ஆம் தேதி தொடங்கியது. விழா நாள்களில் தினமும் கோயிலில் உச்சிகால தீபாராதனைக்குப் பின் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேரும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. நிறைவு நாளை வசந்த திருவிழாவாக கொண்டாடும் விதமாக, சனிக்கிழமை இன்று வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது.
இதையொட்டி கோயிலில் அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையாகிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் திருக்கோயிலிலிருந்து தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபம் சேர்கிறார். அங்கு மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வருதலும், முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவமும் நடைபெறுகிறது. பின்னர், தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி கிரிவீதி வலம் வந்து திருக்கோயில் சேர்கிறார்.
வைகாசி விசாக திருவிழாவையொட்டி, லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் பங்கேற்பதற்காக பக்தர்கள் பாதயாத்திரையாக திருச்செந்தூரில் குவிந்து வருகின்றனர். ராமநாதபுரம், மதுரை, அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து 5 லட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் கோயிலில் பொது தரிசன வழி, சிறப்பு வழிகளில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story