நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆண்டுகளில் 260 குழந்தைகள் விற்பனை; மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் பிறந்த 260 குழந்தைகளின் விவரங்கள் தெரியாததால், விற்கப்பட்டனவா? என்று சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில், விருப்ப ஓய்வு பெற்ற செவிலியர் அமுதவள்ளி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொல்லிமலையில் பிறந்த பல குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. தற்போது, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணையில் உள்ளது. மேலும் சுகாதாரத்துறையினர் வீடு வீடாகச் சென்று குழந்தைகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கடந்த 4 ஆண்டுகளாக குழந்தை விற்பனையில் ஈடுபட்டு வருவதாக, கைது செய்யப்பட்டவர்கள் கூறியதன் காரணமாக, அந்த கால கட்டத்திற்குள் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகள் தொடர்பாக கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது.
அதன்படி, கடந்த 4 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 300 குழந்தைகள் பிறந்திருப்பதும், அதில் 260 குழந்தைகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை எனவும், சிபிசிஐடியிடம் நாமக்கல் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அந்த 260 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டனவா? அல்லது அவர்களது பெற்றோர் வேறு இடத்திற்கு சென்று விட்டார்களா? அல்லது உடல்நலம் பாதிக்கப்பட்டு குழந்தைகள் இறந்து போனதா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அந்த 260 குழந்தைகளின் பெற்றோர் முகவரிகளை வைத்துக் கொண்டு நாமக்கல் மாவட்டம் முழுவதும் சிபிசிஐடி போலீசார் விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.
குழந்தைகள் விற்பனை வழக்கில் மேலும் ஒரு பெண் இடைத்தரகர் கைது செய்யப்பட்டு உள்ளார். பெங்களூரை சேர்ந்த ரேகாவை சிபிசிஐடி போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story