கல்வெட்டு பொறித்த விவகாரம்: குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை கைது செய்தது போலீஸ்
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் கல்வெட்டு பொறித்த விவகாரத்தில் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
ஓ.பி.எஸ் மகன் ரவீந்திரநாத் பெயருடன் எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு பொறித்த விவகாரத்தில் தேனி மாவட்டம் குச்சனூர் கோயில் நிர்வாகி வேல்முருகனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் காவலர் வேல்முருகன் சின்னமனூர் அருகே ஒடைப்பட்டியை சேர்ந்தவர் ஆவர்.
அதிமுக வழக்கறிஞர் அளித்த புகாரின் அடிப்படையில் சின்னமனூர் போலீசார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே எம்.பி என குறிப்பிட்டு கல்வெட்டு பொறித்ததால் பெரும் சர்ச்சை உருவானது குறிப்பிடத்தக்கது.
வேல்முருகன் பல்வேறு சாதனைகளுக்கும், சர்ச்சைகளுக்கும் சொந்தகாரர். ஆறு, கடலில் நீண்ட தூரம் நீந்தி சென்று சாதனை படைத்தவர். கையில் காரையும், வயிற்றில் மோட்டார் சைக்கிளையும் ஏற்றி சாதித்தவர். இவரது சாகசத்துக்காக ஜெயலலிதாவிடம் விருது பெற்றுள்ளார்.
ஜெயலலிதா மறைந்தவுடன் சீருடையுடன் மொட்டை அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். காவிரி நதிநீர் விவகாரத்தில் தேனி கலெக்டர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதம் இருந்தார். ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக கூறி லோயர்கேம்ப் பென்னிகுவிக் மண்டபத்தில் உண்ணாவிரதம் இருந்தவர். சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க கூடாது என்று தீக்குளிக்க முயன்றார். தொடர்ந்து காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியதால் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story