நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும்


நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும் சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவு இரவு 8 மணிக்கு வெளியாகும்
x
தினத்தந்தி 21 May 2019 5:30 AM IST (Updated: 21 May 2019 5:35 AM IST)
t-max-icont-min-icon

நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிவு நள்ளிரவுக்கு பிறகே தெரிய வரும். சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு வெளியாகும்.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதியன்று 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு தேர்தல், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தன. கடந்த 19-ந் தேதியன்று 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும், 13 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தலும் நடந்தது.

ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட எந்திரங்களும், அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ஒப்புகைச் சீட்டு எந்திரங்களும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை மறு தினம் (வியாழக்கிழமை) நடக்கிறது. தமிழகம் முழுவதும் 45 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும்.

ஒரு மையத்துக்கு 14 மேஜை என்ற கணக்கில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் அதற்கான அறிவிப்பு உடனடியாக வெளியிடப்படும்.

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை, லயோலா கல்லூரி (மத்திய சென்னை), ராணி மேரி கல்லூரி (வட சென்னை), அண்ணா பல்கலைக்கழகம் (தென் சென்னை) ஆகிய 3 மையங்களில் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாக்கு எண்ணிக்கைக்கான பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். சென்னை மையங்களில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு அளிப்பர். பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்களும் ஈடுபடுவார்கள்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை சரிபார்ப்பதற்காக இந்த முறை ஒப்புகைச் சீட்டு எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் சேர்த்து எண்ணுவதற்கு சுப்ரீம் கோர்ட்டு ஆணை பிறப்பித்துள்ளது. அந்த வகையில் ஒரு சட்டமன்றத்துக்கு 5 ஒப்புகைச் சீட்டு எந்திரம் (வி.வி.பி.ஏ.டி.) என்ற வகையில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் (6 சட்டமன்றங்களை உள்ளடக்கிய தொகுதி என்றால்) 30 வி.வி.பி.ஏ.டி. எந்திரங்களில் உள்ள சீட்டுகளையும் எண்ண வேண்டும்.

ஒவ்வொரு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்துக்கும் எண் இருக்கும். குலுக்கல் முறையில் அதில் 5 எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு சீட்டுகள் எண்ணப்படும். இந்த தேர்வை வீடியோ படம் எடுப்பார்கள். இதனால் ஓட்டு எண்ணிக்கையில் காலதாமதம் ஆகலாம். வாக்குப்பதிவு எந்திரங்களில் உள்ள ஓட்டுகளை எண்ணிவிட்டு கடைசியில்தான் வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் உள்ள சீட்டுகள் எண்ணப்படும்.

தபால் ஓட்டுகள் அதிகமாக இருக்கும் இடங்களில் கூடுதல் மேஜை போடப்பட்டு அவை எண்ணப்படும். ஓட்டு எண்ணிக்கையில் துரிதம் காட்டுவதைவிட, துல்லியமாகவும், சரியாகவும் எண்ணிக்கை அமைய வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் நடந்ததுபோல, இந்த முறை விரைவாக முடிவுகளை எதிர்பார்க்க முடியாது என்றே தெரிகிறது.

ஓட்டு எண்ணிக்கைக்கான ஒவ்வொரு மையத்திலும் கண்காணிப்பாளர், நுண் பார்வையாளர், வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பார்கள். வேட்பாளர்களின் முகவர்களிடம் வாக்கு எண்ணும் எந்திரங்களின் எண், ஒப்புகைச் சீட்டு எந்திரங்களின் எண் ஆகியவற்றை காட்டிய பிறகே ஓட்டு எண்ணிக்கை தொடங்கும்.

வாக்கு எண்ணிக்கையை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டியதிருப்பதால், ஒவ்வொரு சுற்றின் இறுதியிலும் சற்று காலதாமதமாகவே அறிவிப்பு வெளியாகும். எனவே, தேர்தலின் உத்தேச முடிவை மதியத்துக்கு பிறகுதான் அறிய முடியும். இறுதி முடிவைப் பெறுவதற்கு இரவு ஆகலாம் என்றே தெரிகிறது. இதுதொடர்பாக தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கே தொடங்க இருக்கிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட பிறகு, வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகள் எண்ணப்படும். சட்டமன்ற இடைத்தேர்தலை பொறுத்தவரை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்கு எண்ணிக்கை மாலை 3 மணி முதல் 4 மணிக்குள் முடிந்துவிடும். சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற 22 தொகுதிகளில் தொகுதிக்கு 5 வி.வி.பி.ஏ.டி. ஒப்புகை சீட்டு எந்திரம் வைக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு வி.வி.பி.ஏ.டி. எந்திரத்தில் (ஒப்புகை சீட்டு) உள்ள சீட்டுகளும் எண்ணி சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாக காலதாமதம் ஏற்படும். ஒரு ஒப்புகை சீட்டு எந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ண குறைந்தது 40 முதல் 50 நிமிடங்கள் வரை ஆகலாம். அதைவைத்து பார்க்கும்போது 4½ மணி முதல் 5 மணி நேரம் வரை ஆகும். எனவே, சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் இரவு 8 மணிக்கு பிறகே தெரிய வரும்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவும் இதேபோல் காலதாமதம் ஏற்படும். உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிக்கு ஒரு வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு எந்திரம் மட்டுமே பொருத்தப்பட்டிருந்தது. அதை எண்ணி முடிக்கவே நள்ளிரவு ஆகிவிட்டது. அதுபோன்ற நிலைதான் தமிழ்நாட்டிலும் ஏற்படும். எனவே நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக நள்ளிரவு வரை ஆகும். வாக்கு எந்திரத்தில் பதிவான ஓட்டுகளை எண்ணும்போது தடங்கல் ஏற்பட்டால் முதலில் அதிலுள்ள பேட்டரி மாற்றப்படும். அதன்பிறகும் பிரச்சினை இருந்தால் வி.வி.பி.ஏ.டி. ஒப்புகைச் சீட்டு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழகத்தில் நடக்க இருக்கும் ஓட்டு எண்ணிக்கை தொடர்பான ஆலோசனை கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, காவல் துறை இயக்குனர் (தேர்தல்) அசுதோஷ் சுக்லா ஆகியோர் அனைத்து மாவட்ட கலெக்டர்கள் (மாவட்ட தேர்தல் அதிகாரிகள்), போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினர்.

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் அப்போது ஆய்வு நடத்தினார்கள். இந்த ஆய்வு கூட்டத்தில் காவல்துறை தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர் சேஷசாயி, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி, ராஜாராமன், இணை தலைமை தேர்தல் அதிகாரிகள் தீபக் ஜேக்கப், மணிகண்டன் மற்றும் அனைத்து தொகுதிகளின் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story