குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையை ஜூன் 12-ந் தேதி திறக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 21 May 2019 9:30 PM GMT (Updated: 21 May 2019 7:23 PM GMT)

குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை திறக்கவேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்குத் தேவையான நீர்ப்பாசனத்திற்கு மேட்டூர் அணையை திறந்துவிட நிர்ணயிக்கப்பட்டுள்ள ஜூன் 12-ந் தேதி திறப்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு காலம் கழிப்பது அதிர்ச்சியளிக்கிறது. கடந்த 8 ஆண்டுகளிலும் உரிய காலத்தில் குறுவைப் பாசனத்திற்கு நீர் திறந்துவிட வழிகாணாமல் டெல்டா விவசாயிகளை வஞ்சித்து அவர்களின் வாழ்வாதாரத்தை அ.தி.மு.க. அரசு சூறையாடி அழித்து வருவது மிகுந்த வேதனையளிக்கிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி தி.மு.க. ஆட்சியில் பெறப்பட்ட 192 டி.எம்.சி. காவிரி நீரை, 177.25 டி.எம்.சி.யாக குறைப்பதற்கு காரணமான அ.தி.மு.க. அரசு, அதிகாரம் படைத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமலும் கோட்டை விட்டது. பல்லும், ‘பவரும்’ இல்லாத வெறும் கூடு போன்றதொரு ஆணையத்தை அமைக்க மத்தியில் உள்ள பா.ஜ.க. அரசுக்கு அனுசரணையாக இருந்த அ.தி.மு.க. அரசு, இன்றுவரை அந்த காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தை கூட்டுவதற்கோ உரிய தண்ணீரைப் பெறுவதற்கோ, டெல்டா விவசாயிகளின் உயிர் காக்கும் விவசாயத் தொழிலைக் காப்பாற்றிடும் நோக்கில் எவ்வித கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது மிகுந்த கவலைதரும் செய்தியாகும்.

சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்த காவிரி இறுதி வரைவுத்திட்டத்தின்படி, ஜூன் முதல் நாள் நீராண்டின் துவக்கம். ஜூன் மாதத்தில் இருந்து வழங்க வேண்டிய தண்ணீரின் அளவு குறித்த அறிக்கையை முன்கூட்டியே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவிடம் தமிழக அரசு கொடுத்திருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்பட்டதாக செய்திகள் ஏதும் இல்லை. அதேபோல் அந்த அறிக்கையின் அடிப்படையில் ஜூன் முதல் நாள் காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டப்பட வேண்டும். அக்கூட்டத்திற்கான அறிகுறிகளும் இதுவரை தென்படவில்லை. “திருத்தப்பட்ட இறுதித் தீர்ப்பின் அடிப்படையில் தமிழகத்திற்குரிய 177.25 டி.எம்.சி. நீரை ஒவ்வொரு மாதமும் எவ்வளவு டி.எம்.சி. வீதம் விடுவிக்க வேண்டும் என்பதை காவிரி ஆணையம் முடிவு செய்யும்” என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அதன்படி ஒவ்வொரு மாதமும் தமிழகத்திற்குத் தர வேண்டிய தண்ணீரின் அளவினை காவிரி மேலாண்மை ஆணையம் முடிவு செய்து விட்டதா? அதற்கும் பதில் இல்லை. ஆகவே காவிரி நீரைப் பெறுவதில் அ.தி.மு.க. அரசு முற்றிலும் கோட்டை விட்டு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதில் மட்டுமே குறியாக இருக்கிறது.

ஆழ்ந்த மெத்தனத்தில் இருந்து அ.தி.மு.க. அரசு தன்னை உடனடியாக விடுவித்துக் கொண்டு விவசாயிகளின் இன்னல்களைப் போக்கி, தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் திகழும் காவிரி டெல்டா மண்டலத்தை காப்பாற்றிட வேண்டும். “வெறும் 48 மணி நேரம் கால அவகாசம் கொடுத்து காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டத்தை கூட்டலாம்” என்று காவிரி இறுதி வரைவுத் திட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் கூட்டங்களைக் கூட்டுவதற்கு, துறை அமைச்சர் என்ற முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உடனடியாக உருப்படியான நடவடிக்கை மேற்கொண்டு, தமிழகத்திற்குரிய காவிரி நீரைப் பெற்று, ஜூன் 12-ந் தேதி மேட்டூர் அணையை குறுவை சாகுபடியின் நீர்ப்பாசனத்திற்காக கால தாமதமின்றி திறந்து விட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அப்படி முடியவில்லை என்றால், அ.தி.மு.க அரசு தலை கவிழ்த்து தனது கையாலாகாத் தனத்தை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, டெல்டா விவசாயிகளிடம் தனது கையை விரித்து மன்னிப்பு கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Next Story