திருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது


திருச்சி அருகே பயங்கரம்: 5 வயது சிறுமி அடித்துக்கொலை கள்ளக்காதலனுடன் தாய் கைது
x
தினத்தந்தி 22 May 2019 3:45 AM IST (Updated: 22 May 2019 2:38 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி அருகே 5 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாய், அவரது கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

திண்டுக்கல் மாவட்டம், சிறும்பிள்ளை பழையூர் பகுதியை சேர்ந்தவர் பிரசன்னபாபு (வயது 38). அப்பகுதியில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி நித்யகமலா (32). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர்களது மகள் லத்திகாஸ்ரீ (5). நித்யகமலா, மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பணிபுரிந்தபோது அங்கு உடற்கல்வி இயக்குனராக வேலை பார்த்த முத்துப்பாண்டி (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.

இந்த விஷயம் பிரசன்னபாபுவுக்கு தெரியவந்ததால் நித்யகமலா கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கணவரை பிரிந்து குழந்தையுடன் அதே பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். முத்துப்பாண்டி, திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள ராமசமுத்திரம் அங்காளம்மன் கோவிலுக்கு கடந்த வாரம் வந்திருந்தார். நித்யகமலாவும் குழந்தையுடன் அங்கு வந்திருந்தார்.

கடந்த 16-ந் தேதி காட்டுப்புத்தூர் நேதாஜி தெருவில் ராஜசேகரன் என்பவருடைய வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு வீடு பிடித்து தங்கினர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் சிறுமி லத்திகாஸ்ரீ டி.வி. பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது முத்துப்பாண்டியும், நித்யகமலாவும் படிக்காமல் டி.வி. பார்த்துக்கொண்டு இருக்கிறாயா? என்று கேட்டு தென்னை மட்டையால் லத்திகாஸ்ரீயின் உடலில் பல இடங்களில் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் துடித்த சிறுமியை காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தூக்கிச் சென்றனர். அங்கு இருந்த டாக்டர்கள் அறிவுறுத்தியதின் பேரில் சிறுமியை நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்பு சிறுமி அங்கிருந்து சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி லத்திகாஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தாள்.

இதுகுறித்து தகவலறிந்த தொட்டியம் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த நித்யகமலாவை பிடித்து சந்தேகத்தின் பேரில் விசாரித்தபோது அவர், தனது குழந்தையை அடித்து கொன்றதை ஒப்புக்கொண்டார். போலீசார் வருவதை தெரிந்து கொண்ட முத்துப்பாண்டி அங்கிருந்து தலைமறைவானார். பின்னர் செல்போன் சிக்னலை வைத்து சேலம் நகர பஸ் நிலையம் அருகே பதுங்கி இருந்த முத்துப்பாண்டியை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

பின்னர் இருவரையும் காட்டுப்புத்தூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். விசாரணையின்போது, குழந்தையை தான் அடிக்கவில்லை இவர்தான் அடித்தார் என இருவரும் ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றம்சாட்டினார்கள். அவர்கள் 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Next Story