எட்டு வழிச்சாலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: தமிழக மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்


எட்டு வழிச்சாலை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு: தமிழக மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்
x
தினத்தந்தி 1 Jun 2019 5:00 AM IST (Updated: 1 Jun 2019 4:45 AM IST)
t-max-icont-min-icon

எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ள நிலையில், தமிழக மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம் இதுவென்று மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சேலம் எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை ரத்து செய்துள்ள சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்திருக்கும் மத்திய அரசுக்கு தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். ஐகோர்ட்டு தீர்ப்பு வெளிவந்த நேரத்தில் வாக்காளர்களைச் சந்தித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யாது” என்று வாக்குறுதி அளித்தார். அதை முன்னிறுத்தி வாக்கும் கேட்டார்.

ஆனால் முதல்-அமைச்சரையும் மேடையில் வைத்துக்கொண்டு “சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து மந்திரியாக இருந்த நிதின் கட்காரி பேசிய போது அதற்கு எதிர்ப்புக்கூட தெரிவிக்காமல், அதையும் ஆமோதிப்பதைப் போல முதல்-அமைச்சர் அமைதி காத்தார். அவரது கூட்டணி கட்சி தலைவரான டாக்டர் ராமதாசும் மவுனமாகவே மேடையில் அமர்ந்திருந்தார். இப்போது அது தொடர்கிறது.

தேர்தல் முடிந்து தமிழகத்தில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி வரலாறு காணாத தோல்வியடைந்த பிறகு குறிப்பாக முதல்-அமைச்சரின் மாவட்டத்திலேயே தோற்ற பிறகு எட்டு வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக இப்போது சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்திருப்பது தமிழக மக்களுக்கு செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். ஒரு நாடாளுமன்ற தொகுதியில் கூட தங்களை வெற்றி பெற வைக்கவில்லை என்ற கோபத்திலும், எரிச்சலிலும் தமிழ்நாட்டிற்கு ஒரு மத்திய மந்திரி பதவி கூடக் கொடுக்காமல் அவமதித்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, பதவியேற்ற அடுத்த நாளே மக்கள் விரோத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

“பதவி” கேட்ட அ.தி.மு.க. அரசை “பக்குவமாக” மிரட்டி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வதற்கு உடந்தையாக இருக்க வைத்துள்ளது. ஆகவே, எடப்பாடி பழனிசாமி அரசின் எடுபிடி அத்தியாயம் 2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தொடங்கி விட்டது என்பதையே இந்த மேல்முறையீடு காட்டுகிறது.

தமிழக மக்களின் வாழ்வாதாரத்துடன் பா.ஜ.க. அரசு இனிமேலும் விபரீத விளையாட்டு நடத்தாமல், சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக சுப்ரீம் கோர்ட்டில் செய்துள்ள மேல்முறையீட்டை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். கடுமையான எதிர்ப்புக்குள்ளாகியுள்ள இந்த சாலைத் திட்டத்தை கைவிட்டு, விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்று வழிகளை யோசிக்க மத்திய பா.ஜ.க. அரசும், அ.தி.மு.க. அரசும் முன்வரவேண்டும் என்றும், முரட்டுத்தனத்தின் மூலம் மக்களை அடக்கி விடலாம் என்பதை கைவிட்டு ஆக்கபூர்வமான வழிகளில் வளர்ச்சிப்பணிகளை மேற்கொண்டிட முன்வந்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், சென்னை ஐகோர்ட்டு உத்தரவுக்கு போலி சொந்தம் கொண்டாடிய டாக்டர் அன்புமணி, இப்போது அ.தி.மு.க. - பா.ஜ.க. அரசுகளின் மக்கள் விரோத நடவடிக்கையை, மாநிலங்கள் அவை மந்திரி பதவிக்காக, கைகட்டி வேடிக்கை பார்க்கப்போகிறாரா? அல்லது எதிர்ப்பு காட்ட கூட்டணியில் இருந்து பா.ம.க. விலகும் முடிவை எடுக்கப்போகிறாரா? என்று பாதிக்கப்படும் மக்கள் கேட்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story