காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; ஆசிரியை தற்கொலை


காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு; ஆசிரியை தற்கொலை
x
தினத்தந்தி 2 Jun 2019 2:47 AM IST (Updated: 2 Jun 2019 2:47 AM IST)
t-max-icont-min-icon

ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார்.

கோவை,

நாமக்கல் மாவட்டம் வேட்டம்பாடி கிராமம் குடி வீதியை சேர்ந்தவர் பூபாலன். இவர் தூத்துக்குடியில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகள் பிரதீபா (வயது 25). இவர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இதற்காக அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் பிரதீபா தனது அறையில் முகத்தை துப்பட்டாவால் மூடியபடி தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர் பிரதீபாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரதீபா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம்குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், ஆசிரியை பிரதீபா தூத்துக்குடியை சேர்ந்த ஒரு வாலிபரை கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்தது தெரிந்தது. அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் பிரதீபாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மனவேதனை அடைந்த பிரதீபா தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story