ரத்தான ரெயிலுக்கு டிக்கெட் வினியோகித்த ஊழியர்கள் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள்


ரத்தான ரெயிலுக்கு டிக்கெட் வினியோகித்த ஊழியர்கள் அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்ட பயணிகள்
x
தினத்தந்தி 2 Jun 2019 2:56 AM IST (Updated: 2 Jun 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயில் சேவை நேற்றும், இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருச்சி,

மன்னார்குடியில் இருந்து திருச்சி வழியாக மானாமதுரைக்கு தினமும் பயணிகள் ரெயில் இயக்கப்படுகிறது. திருச்சிக்கு இந்த ரெயில் காலை 9.45 மணிக்கு வந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு செல்லும். தற்போது புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணியின் காரணமாக மன்னார்குடி-மானாமதுரை பயணிகள் ரெயில் சேவை நேற்றும், இன்றும்(ஞாயிற்றுக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால் இது தொடர்பாக ரெயில்வே நிர்வாகம் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்த இந்த ரெயிலில் பயணம் செய்ய பலர் டிக்கெட் வாங்கினார்கள். ரெயில் நிலைய ஊழியர்களும் ரெயில் ரத்து தொடர்பாக எதுவும் தெரிவிக்காமல் பயணிகளுக்கு டிக்கெட்டுகளை வினியோகித்தனர். டிக்கெட் பெற்ற பயணிகள் பலரும் ரெயில் நிலைய நடைமேடைக்கு சென்றனர். வழக்கமான நேரத்தை தாண்டியும் ரெயில் வராததால் பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். இந்த நிலையில் மானாமதுரை பயணிகள் ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒலிபெருக்கியில் திடீரென அறிவிக்கப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பயணிகள் ரெயில் நிலைய அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த ரெயில் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், டிக்கெட் வினியோக மையத்தில் ஊழியர்கள் தவறுதலாக டிக்கெட் வினியோகித்து விட்டதாகவும், டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து பயணிகள் தாங்கள் எடுத்த பயண டிக்கெட்டை கவுண்ட்டரில் செலுத்தி பணத்தை திரும்ப பெற்றனர். பின்னர் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு பஸ்களில் சென்றனர்.

Next Story