ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வயலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வயலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 2 Jun 2019 4:15 AM IST (Updated: 2 Jun 2019 3:00 AM IST)
t-max-icont-min-icon

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி வயலுக்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி,

காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயத்தை அழித்திடும் வகையில் மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக நேற்று மன்னார்குடி அருகே 54.நெம்மேலியில் மன்னார்குடி ஒன்றிய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பருத்தி வயலுக்குள் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வேதாந்தா, ஓ.என்.ஜி.சி., பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஹைட்ரோ கார்பன் எடுக்க வழங்கியுள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு பொதுமக்கள், விவசாயிகளுக்கு எதிரான போக்கை கைவிட வேண்டும். மக்களுக்கு எதிரான மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல நான்காம்சேத்தி, சேரங்குளம் உள்ளிட்ட இடங்களிலும் விவசாயிகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார்குடி கீழப்பாலம் அருகே உள்ள அய்யனார் குளத்திற்குள் இறங்கி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தஞ்சை தலைமை தபால் நிலையம் முன்பு பல்வேறு கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்காக உரிய அனுமதி கேட்டு போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. தஞ்சை துணை போலீஸ் சூப்பிரண்டு, 18 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

தமிழகத்தில் இப்படி இதுவரை யாரும் கேள்வி கேட்டு நோட்டீசு அனுப்பியது கிடையாது. இது அரசின் உத்தரவா? அல்லது துணை போலீஸ் சூப்பிரண்டு தன்னிச்சையாக செயல்பட்டுள்ளரா? என்பதை தெரியப்படுத்த வேண்டும். அனுமதி கொடுத்தாலும், மறுக்கப்பட்டாலும் திட்டமிட்டபடி 4-ந் தேதி தஞ்சையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மக்களின் உணர்வுக்கு மதிப்பு அளித்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். இல்லையென்றால் போராட்டம் தீவிரப்படுத்தப்பட்டு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு மத்திய, மாநில அரசுகளே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story