தமிழகத்தில் அனைத்து கடைகளும் 24 மணிநேரமும் திறக்க அனுமதி சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது


தமிழகத்தில் அனைத்து கடைகளும் 24 மணிநேரமும் திறக்க அனுமதி சட்டம் விரைவில் அமலுக்கு வருகிறது
x
தினத்தந்தி 2 Jun 2019 5:26 AM IST (Updated: 2 Jun 2019 5:26 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பதை அனுமதிக்கும் சட்டம் விரைவில் அமலுக்கு வர உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடைகள் மற்றும் பல்வேறு நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (பணி ஒழுங்குமுறை மற்றும் சேவைக்கான நிபந்தனைகள்) சட்ட மசோதா இறுதி செய்யப்பட்டது.

அதன்படி, அனைத்து சினிமா தியேட்டர்கள், ஓட்டல்கள், கடைகள், வங்கிகள் மற்றும் பல்வேறு தொழில் நிறுவனங்கள் வாரத்துக்கு 7 நாட்களிலும் 24 மணிநேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த மசோதாவை ஒவ்வொரு மாநிலமும் அப்படியே பின்பற்றலாம் அல்லது அந்தந்த மாநிலத்தின் நடைமுறை தேவைகளின்படி மாற்றிக்கொண்டு அமல்படுத்தலாம் என்று வழிவகை செய்யப்பட்டது.

இந்தியாவில் அந்த மசோதாவை அமல்படுத்திய மாநிலம் மராட்டிய மாநிலமாகும். 2018-ம் ஆண்டு முதல் அங்கு கடைகள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதிக்கப்படுகின்றன. தமிழகத்தில் 2017-ம் ஆண்டு மார்ச் 22-ந் தேதிவரை ஓராண்டுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் அரசுக்கு தொழிலாளர் ஆணையர் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், பெண் பணியாளர் பாதுகாப்பு உள்ளிட்ட சில நிபந்தனைகளுடன் ஆண்டு முழுவதும் 24 மணிநேரமும் கடைகள் மற்றும் நிறுவனங்களை திறந்து வைப்பதற்கான அனுமதியை அரசு வழங்கலாம் என்று அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார். அந்தக் கடிதத்தை அரசு ஏற்றுக்கொண்டது. அதற்கான வரைவு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் சில நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. வாரம் ஒரு நாள் ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். ஒவ்வொரு ஊழியரைப் பற்றிய தகவலும் குறிப்பிட்ட முறைப்படி எழுதப்பட்டு அந்த நிறுவனத்தின் அனைவரது பார்வையிலும் படும் இடத்தில் வைக்கப்பட்டு இருக்க வேண்டும்.

எந்தவொரு நாளிலும் ஒரு பணியாளரை 8 மணிநேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 48 மணி நேரத்துக்கு மேல் வேலை பார்க்க வைக்கக் கூடாது. அதுபோல ஓவர் டைம் பணியையும், ஒரு நாளுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல் அல்லது வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் பணியாற்ற வைக்கக் கூடாது.

இயல்பான நாட்களில் இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் பணியாற்றத் தேவையில்லை. எழுத்து மூலம் சம்மதத்தை பெற்ற பிறகு வேண்டுமானால் பெண்களை இரவு 8 மணியில் இருந்து மறுநாள் காலை 6 மணிவரை தகுந்த பாதுகாப்புடன் பணியாற்ற அனுமதிக்கலாம் என்று நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன.

Next Story