மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்


மு.க.ஸ்டாலின் தலைமையில் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2019 6:00 AM GMT (Updated: 3 Jun 2019 6:00 AM GMT)

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ள ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

சென்னை,

முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  96-வது பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் அவரது சிலைக்கும், நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினர்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞரின் சிலைக்கு மு.க.ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு மற்றும் முக்கிய நிர்வாகிகள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

பின்னர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர். 
அதனைத் தொடர்ந்து கோபாலபுரம் சென்ற மு.க.ஸ்டாலின் தனது தாயார் தயாளு அம்மாளைச் சந்தித்தார். மக்களவை உறுப்பினர் கனிமொழியும் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
 
தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில்  மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்ட வாரியாக கட்சி வளர்ச்சிப் பணிகள், தொகுதி வாரியாக வாக்களர்களுக்கு நன்றி தெரிவித்தல் மற்றும் நன்றிக் கூட்டங்கள் நடத்துவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இடைத்தேர்தலில் தோல்வி அடைந்த தொகுதிகளில் அதற்கான காரணம் குறித்தும் ஆலோசிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ள சூழலில் அதற்கான பணிகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில், தமிழகத்தின் நிரந்தர தலைப்புச் செய்தி; இன்று நிரந்தர உயிர்ப்புச் சக்தி என்று தெரிவித்துள்ளார். கலைஞரின் பிறந்தநாள், இன்பத் தமிழினத்தின் பிறந்தநாள் என்று கூறியுள்ள அவர், கலைஞர் இருந்து சாதிக்க வேண்டியதை தாங்கள் நிறைவேற்றிக்காட்ட உறுதி எடுக்கும் நாள் என்று கூறியுள்ளார்.

இதனிடையே மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது டிவிட்டர் பதிவில் தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளில் அவரை அன்புடன் நினைவுகூர்வதாகத் தெரிவித்துள்ளார். சிறந்த அரசியல் மேதையும் உயரிய தலைவருமான அவர் அனைவராலும் விரும்பப்பட்டவர் என்றும் கூறியுள்ளார்.

Next Story