இந்தியை திணிப்பது தமிழர்களை உரசிப்பார்க்கும் செயல் மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டத்தில் தீர்மானம்
இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தான முடிவுகளை தி.மு.க. எப்போதும் எதிர்க்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழகத்தில் இந்தியை திணிப்பது தமிழர்களை உரசிப்பார்க்கும் செயலாகும் என்றும், இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தான முடிவுகளை தி.மு.க. எப்போதும் எதிர்க்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி மகத்தான வெற்றி பெற்றதைத்தொடர்ந்து மாவட்ட செயலாளர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத் தில் நேற்று காலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். கூட்டத்தில், தி.மு.க. பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன், அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி.க்கள் ஜெகத்ரட்சகன், கனிமொழி, தயாநிதிமாறன், ஆ.ராசா, திருச்சி சிவா, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் பி.கே.சேகர்பாபு, ஜெ.அன்பழகன், ம.சுப்பிரமணியன் உள்பட மாவட்ட செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகள் 13 சட்டமன்ற தொகுதிகளில் பெற்ற வெற்றி குறித்தும், 9 சட்டமன்ற தொகுதிகளில் தோல்விக்கான காரணம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், விரைவில் நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
கருணாநிதியின் பிம்பங்களாக...
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
* மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்த நாளினை கொண்டாடும் இந்தவேளையில், தி.மு.க. தலைமையில் அமைந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று, இந்திய நாடாளுமன்றத்தின் 3-வது பெரும் கட்சியாக தி.மு.க. உருவெடுத்து செம்மாந்து நிற்கிறது.
எனவே, தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சிந்தனை, சொல், செயல் ஆகிய அனைத்திலும் அணுவளவும் பிறழாது அனுதினமும் பின்பற்றி, தலைவர் கருணாநிதியின் உயிரோட்டம் மிக்க பிரதி பிம்பங்களாக இந்திய நாடாளுமன்றத்திலும், தொகுதியிலும் திகழ்ந்து, உறவுக்கு கை கொடுத்து உரிமைக்கு குரல் கொடுக்கும் வகையில் சீரிய செயலாற்றி, “நாம் என்றும் மக்கள் ஊழியர்களே” என்ற நற்பெயர் பெற வேண்டும்.
மு.க.ஸ்டாலினுக்கு நன்றி
* தமிழகம், புதுச்சேரியில் மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 39 நாடாளுமன்ற தொகுதிகளில் 38 தொகுதிகளிலும், இடைத்தேர்தல் நடைபெற்ற 23 சட்டமன்றத் தொகுதிகளில் 14 சட்டமன்ற தொகுதிகளிலும், இந்தியாவே திரும்பிப் பார்த்துப் போற்றும் மாபெரும் வெற்றியைப் பெற்ற தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
* வாக்காளர்களிடம் வாக்கு கேட்கச்சென்ற அதே முனைப்புடனும், ஆர்வத்துடனும், தி.மு.க. எம்.பி.க்கள், இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள், ஒவ்வொருவரும் தத்தமது தொகுதிகளில் தவறாமல் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பேதம் பார்க்காமல், அனைத்து வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவித்திட வேண்டும்.
குடிநீர் பற்றாக்குறை
* பருவமழை பொய்த்தது முன்கூட்டியே தெரிந்தும், எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டங்களையும் நிறைவேற்றாமல், கூட்டுக் குடிநீர் திட்டங்கள் பற்றியே கவலை கொள்ளாமல் இருக்கும் ஆளும் அ.தி.மு.க. அரசால் தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. ஒரு குடம் தண்ணீர் 15 ரூபாய்க்கு விற்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழகத்தின் தண்ணீர் பஞ்சத்தைப் போக்க ஆளும் அ.தி.மு.க. அரசு உடனடியாக போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, கடல்நீரை குடிநீராக்கும் திட்டங்கள் மற்றும் கூட்டு குடிநீர்த் திட்டங்கள் போன்ற தொலைநோக்குத் திட்டங்களையும் விரைந்து நிறைவேற்ற முன்வர வேண்டும்.
தமிழர்களை உரசிப் பார்ப்பது
* “இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் ஆட்சி மொழியாக நீடிக்கும்” என்று நேரு பிரதமராக இருந்தபோது நாடாளுமன்றத்தில் கொடுத்த வாக்குறுதி, “இனி இந்தி தமிழ்நாட்டில் இல்லை” என்று அண்ணா கொண்டு வந்து நிறைவேற்றி அன்னைத் தமிழை அரியணையில் அமர வைத்த இருமொழிக் கொள்கை, “தமிழ் கட்டாயம் கற்க வேண்டும்” என்று தலைவர் கருணாநிதி கொண்டு வந்த சட்டம் ஆகியவற்றிற்கும் மொழிவாரி மாநிலங்கள், கூட்டாட்சித் தத்துவம் போன்றவற்றிற்கும் எதிராக மோடி அரசு ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், புதிய கல்விக்கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்கான குழு, இந்தியைத் திணிக்கும் மும்மொழித் திட்டத்தை பரிந்துரை செய்து, மத்திய அரசிடம் வழங்கியது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படும் என்ற செய்தி பரவியது. தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் எதிர்ப்பு குரல் கிளம்பியது. அதன் தொடர்ச்சியாக, மத்திய மந்திரிகள் அந்த அறிக்கை, பலரையும் கலந்து ஆலோசித்த பிறகுதான், செயல்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்கள்.
இது தமிழர்களை உரசிப் பார்க்கும் செயலாகும். பன்மொழி, பண்பாட்டோடு விளங்கும் ஒரு நாட்டில் மக்களின் கருத்துகளை அறியாமல் மத்திய அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என நம்புகிறோம். அதைப்போல, தமிழர்களின் உணர்வோடு விளையாட வேண்டாம் என்று மத்திய பா.ஜனதா அரசை இக்கூட்டம் கேட்டுக் கொள்வதோடு; தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கைக்கு ஆபத்தை விளைவிக்கும் எந்தவொரு முடிவுகளையும், அது எந்த நேரத்தில் வந்தாலும் தி.மு.க. ஜனநாயக வழி நின்று மிகக் கடுமையாக எதிர்க்கும்.
* விவசாயிகளின் உண்மையான உணர்வுகளுக்கு மதிப்பளித்து, காவிரி டெல்டா மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டங்களை, மறுசிந்தனை ஏதுமின்றி, திரும்பப் பெற வேண்டும் என்றும், காவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக” உடனடியாக அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Related Tags :
Next Story