8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக 17 கிராம மக்கள் குடும்பத்துடன் உண்ணாவிரதம்
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
சேலம்,
8 வழிச்சாலை திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. 17 கிராம மக்கள், கண்களில் கருப்பு துணி கட்டி குடும்பத்துடன் உண்ணாவிரதம் இருந்தனர்.
8 வழிச்சாலை திட்டம்
சேலம்-சென்னை இடையே 8 வழி பசுமை சாலை அமைக்க மத்திய அரசு ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, இந்த சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகளை சேலம், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டனர். விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக இந்த திட்டத்திற்கு சென்னை ஐகோர்ட்டு தடை விதித்தது.
இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவை எதிர்த்து, மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மேல்முறையீட்டை வாபஸ் பெறக்கோரியும் சேலம் மாவட்டத்தில் 8 வழிச்சாலை திட்டத்தால் பாதிக்கப்படும் நாழிக்கல்பட்டி, அயோத்தியாப்பட்டணம் விவசாயிகள் கடந்த 1-ந் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர்.
17 கிராம மக்கள்
இதன் தொடர்ச்சியாக சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மீண்டும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக நேற்று சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் 17 கிராம மக்கள் இந்த திட்டத்திற்கு எதிராக அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்து இருந்தனர்.
சேலம் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி பகுதியிலும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பு துணி கட்டினர்
்இதேபோல், சேலம் அருகே ராமலிங்கபுரத்தில் நேற்று காலை, விவசாயிகள், பெண்கள் கண்களில் கருப்பு துணி கட்டிக்கொண்டு உண்ணாவிரதம் இருந்தனர்.
ஆச்சாங்குட்டப்பட்டியில் விவசாயிகள் தங்கள் கைகளில் பதாகைகள் மற்றும் கோரிக்கை அட்டைகளை ஏந்தியபடி உண்ணாவிரதம் இருந்தனர்.
இதுதவிர சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள தனியார் விவசாய நிலத்தில் பூலாவரி, அக்ரஹாரம், புஞ்சைக்காடு, ஆத்துக்காடு, சித்தனேரி, உத்தமசோழபுரம் ஆகிய 6 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 8 வழிச்சாலைக்கு எதிராக நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் வாயில் கருப்பு துணி கட்டியபடி பங்கேற்றனர். மேலும் இந்த பகுதிகளில் நடப்பட்டு இருந்த நில அளவை கற்களை விவசாயிகள் ஆவேசமாக பிடுங்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 4 கிராமங்களில் நடந்த இந்த போராட்டங்களில் சுற்றுவட்டாரத்தில் உள்ள 17 கிராம மக்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story