ரம்ஜான் பண்டிகை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகை


ரம்ஜான் பண்டிகை: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகை
x
தினத்தந்தி 4 Jun 2019 1:23 PM IST (Updated: 4 Jun 2019 4:02 PM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இஸ்லாமியர்கள் இன்று சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

சென்னை

வானில் முதல் பிறை தெரிந்ததால் சவூதி அரேபியா, கத்தார், குவைத், உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளில் இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஆனால் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரமலான் நோன்பு மாதத்தின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை இருக்கும் என்றும், புதன்கிழமை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புவியியல் அமைப்புக்கு ஏற்ப ஒவ்வொரு நாட்டிலும் முதல் பிறை தோன்றுவதற்கு ஏற்ப அந்நாடுகளில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம்.

மதுரை மாவட்டத்தில் ஜாக் ( Jaqh)  அமைப்பை சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடினர். மதுரை தமுக்கம் மைதானம், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜாக் அமைப்பு இஸ்லாமியர்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  அதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

இதுபோல் தமிழகத்தில் நெல்லை, நாகூர், கோவை உள்பட பல்வேறு பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்

இந்நிலையில் தமிழகத்தில் நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பைச்சேர்ந்த இஸ்லாமியர்கள் இன்றுகாலையில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

கோவை குனியமுத்தூர் பகுதியில், நடைபெற்ற சிறப்பு தொழுகையில், ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர். புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள், தொழுகைக்குப் பின்னர் ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். 

நெல்லை மேலப்பாளையம் பஜார் திடலில் தக்வா ஜமாத் கமிட்டி சார்பில் இன்று ரமலான் சிறப்பு தொழுகை நடைப்பெற்றது. இதில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினார்கள் .பின்னர் ஒருவருக்கொருவர் ரம்ஜான் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் கோட்டார் அருகே இடலாகுடி பகுதியில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

Next Story