கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை? போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த என்ன நடவடிக்கை? போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 5 Jun 2019 4:45 AM IST (Updated: 5 Jun 2019 5:57 AM IST)
t-max-icont-min-icon

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து போலீஸ் அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் பெருகிவரும் வாகன விபத்தை கட்டுப்படுத்த கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்தக்கோரி கே.கே.ராஜேந்திரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், ‘கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த போலீஸ் அதிகாரிகள் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தனர்?’ என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘ஹெல்மெட் அணிவது குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை போலீசார் நடத்தி வருகின்றனர்’ என்று கூறினார்.

நேரில் ஆஜராகி விளக்கம்

அதற்கு நீதிபதிகள், ‘நேற்று முன்தினம் கூட பைக் ரேசில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் சென்னையில் பலியாகி உள்ளனர். அவர்களில் மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் ஹெல்மெட் அணியவில்லை’ என்று கூறினர். ‘சட்டவிரோத பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்’ என்று அரசு வக்கீல் கூறினார்.

இதையடுத்து, நீதிபதிகள், ‘கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த இதுவரை எடுத்த நடவடிக்கை என்ன? என்பது குறித்து போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை கமிஷனர்கள் நாளை (வியாழக்கிழமை) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

Next Story