சாத்தூர், விளாத்திகுளம் அருகே நடந்த பஸ், கார் விபத்துகளில் 6 பேர் பலி; 58 பேர் படுகாயம்


சாத்தூர், விளாத்திகுளம் அருகே நடந்த பஸ், கார் விபத்துகளில் 6 பேர் பலி; 58 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 4 Jun 2019 10:00 PM GMT (Updated: 4 Jun 2019 7:23 PM GMT)

சாத்தூர், விளாத்திகுளம் அருகே நடந்த கார் மற்றும் பஸ் விபத்துகளில் 6 பேர் பரிதாபமாக இறந்தனர். 58 பேர் படுகாயம் அடைந்தனர்.

சாத்தூர், 

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் கரிப்போடு தாலுகா கொடுவாயூர் கிராமத்தை சேர்ந்த 70 பேர் தமிழகத்திற்கு சுற்றுலா புறப்பட்டடனர். அவர்கள் ஒரு பஸ்சில் கோபாலகிருஷ்ணன்(வயது 49), தேவயானி(45) ஆகியோர் தலைமையில் தமிழகத்திற்கு வந்தனர். பாலக்காட்டை சேர்ந்த நிஷாத்(25) என்பவர் பஸ்சை ஓட்டினார். அவர்கள் பல்வேறு பகுதிகளை சுற்றிபார்த்து விட்டு நேற்று முன்தினம் கன்னியாகுமரிக்கு சென்றனர். அங்குள்ள கோவில்களுக்கும், பத்மநாபபுரம் அரண்மனை உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுவிட்டு இரவில் பஸ்சில் அங்கிருந்து புறப்பட்டனர்.

இந்த பஸ் நேற்று அதிகாலை 3 மணி அளவில் கோவில்பட்டி-சாத்தூர் நெடுஞ்சாலையில் சாத்தூர் அருகே உள்ள பெத்துரெட்டியபட்டி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலையோரம் உள்ள பள்ளத்தில் இறங்கி தலைகுப்புற கவிழ்ந்தது.

3 பேர் பலி

இது பற்றி தகவல் அறிந்த சாத்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் சரோஜினி (65), பெட்டம்மாள் (75) என 2 பெண்களும், 8 வயது சிறுமி நிகிலாவும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததால் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

மேலும் இந்த விபத்தில் தேவயானி, தேவி (60), லீலா (53), தங்காள் (56) மற்றும் குழந்தைகள் உள்பட 58 பேர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு சாத்தூர் மற்றும் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் நிஷாத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு விபத்து

இதே போல் விளாத்திகுளம் அருகே நடந்த மற்றொரு விபத்தில் 3 பேர் பலியானார்கள். அதன் விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட எல்லையில் உள்ளது உச்சிநத்தம் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த செல்வகணேஷ் (வயது 40) மேலாளராக பணியாற்றி வந்தார். அதே வங்கியில் நாகர்கோவிலை சேர்ந்த நாகராஜ் (42) காவலாளியாக இருந்தார்.

நேற்று காலையில் வங்கி மேலாளர் செல்வகணேஷ், காவலாளி நாகராஜூடன் ஒரு காரில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூருக்கு சென்றார். அங்கு உள்ள ஸ்டேட் வங்கி கிளையில் பண பரிவர்த்தனைக்காக ரூ.45 லட்சம் எடுத்தனர். பின்னர் அதே காரில் மீண்டும் உச்சிநத்ததுக்கு வேம்பார், சூரங்குடி வழியாக வந்து கொண்டிருந்தனர். காரை தூத்துக்குடி பாரதி நகரை சேர்ந்த அழகுராஜ் (45) ஓட்டினார்.

ரூ.45 லட்சம் மீட்பு

விளாத்திகுளம் அருகே வேம்பாரை அடுத்த கீழசண்முகபுரம் நோக்கி கார் வந்து கொண்டிருந்தது. அப்போது வேம்பாரில் இருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற அரசு பஸ், கீழ சண்முகபுரம் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்று கொண்டிருந்தது. அங்கு வந்த கார் சாலையோரத்தில் நின்ற அரசு பஸ்சின் பின்னால் மோதியது.

இதில் செல்வகணேஷ், நாகராஜ், டிரைவர் அழகுராஜ் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

இந்த கோர விபத்து குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள் காரின் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி இருந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பரிசோதனைக்காக விளாத்திகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் இருந்த ரூ.45 லட்சத்தை போலீசார் பாதுகாப்பாக மீட்டு உச்சிநத்தம் ஸ்டேட் வங்கி கிளையில் ஒப்படைத்தனர். விபத்து பற்றி சூரங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story