“சாதிக்க பிறந்தவர்கள் தமிழர்கள்” நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன் வாழ்த்து


“சாதிக்க பிறந்தவர்கள் தமிழர்கள்” நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு தமிழிசை சவுந்தரராஜன்  வாழ்த்து
x
தினத்தந்தி 5 Jun 2019 4:34 PM GMT (Updated: 5 Jun 2019 4:34 PM GMT)

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நாடு முழுவதும் கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்ற மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியானது. இதில், தமிழக அளவில் மாணவி ஸ்ருதி 685 மதிப்பெண்களுடன் முதலிடமும், தேசிய அளவில் 57-ஆவது இடமும் பிடித்துள்ளார். இந்நிலையில்  நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ, மாணவிகளுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்  வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நீட் தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவ,மாணவியருக்கு எனது வாழ்த்துக்களும்,பாராட்டுகளும்...தனது கடும் உழைப்பால் நீட் தேர்வில் தமிழக அளவில் முதலிடம் பெற்ற மாணவி ஸ்ருதிக்கும், முயற்சி திருவினையாக்கும்...என்பதையும் சாதிக்க பிறந்தவர்கள் தமிழர்கள் என்பதை மீண்டும்  நிருபித்த தமிழக மாணவ செல்வங்களுக்கும்,ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள்...  

நீட் பற்றிய பொய்யான வாக்குறுதிகளும் தவறான பிரச்சாரங்களும் குழப்பமான செய்திகள் இவற்றிற்கிடையே சாதித்து காட்டிய சாதனை நாயகர்கள் நீங்கள்...

கல்வி வியாபாரத்திற்கு முற்று புள்ளி வைத்த நம் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் மத்திய அரசுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

நீட் தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் துவண்டு  போகாமல் மறு முயற்சி செய்து தோல்வியை வெற்றிக்கு படிகட்டாக்க வேண்டும். தற்கொலை போன்ற முடிவுகள் தீர்வாகாது என்பதை கனத்த இதயத்துடன் பதிவு செய்கிறேன்.

நீட் தேர்வை கொண்டு வந்த மோடி அவர்களின் அரசு தமிழகத்திற்கு முன்பு இருந்ததை விட புதிதாக சுமார் 3000 இடங்களுக்கும் மேலான எம்.பி.பி.எஸ் இடங்களையும், எய்ம்ஸ் மருத்துவமனையையும் கொண்டு வந்துள்ளது. எனவே அனைவரும் நம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ளுங்கள் நாளைய வெற்றி உங்களுக்கே....

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story