பெண்கள் சாமியாடி அருள்வாக்கு சொன்னதால் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடிய கிராம மக்கள்


பெண்கள் சாமியாடி அருள்வாக்கு சொன்னதால் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை தேடிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 6 Jun 2019 3:30 AM IST (Updated: 6 Jun 2019 2:20 AM IST)
t-max-icont-min-icon

பெண்கள் சாமியாடி அருள்வாக்கு சொன்னதால், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை மீண்டும் எடுத்து வழிபடுவதற்காக கிராம மக்கள் தேடினர்.

சேலம், 

பெண்கள் சாமியாடி அருள்வாக்கு சொன்னதால், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, காவிரி ஆற்றில் வீசிய அம்மன் சிலையை மீண்டும் எடுத்து வழிபடுவதற்காக கிராம மக்கள் தேடினர்.

அருள்வாக்கு கூறிய பெண்கள்

சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே செட்டிமாங்குறிச்சி ஊராட்சி ஒட்டப்பட்டியில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு செல்லியாண்டியம்மன் கோவில் புனரமைக்கப்பட்டது. இந்த திருப்பணியின் போது, அங்கிருந்த அம்மன் சிலையை எடுத்து சென்று பூலாம்பட்டி காவிரி ஆற்றில் போட்டு விட்டனர்.

பின்னர் கோவிலில் புதிய சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் வைகாசி மாதம் கோவில் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த கிராமத்தில் தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தில் ஏரி மராமத்து பணி நடந்தது. அப்போது அங்கு பணிபுரிந்த சில பெண்கள் திடீரென சாமியாடி அருள்வாக்கு கூறினர்.

சாமி சிலையை தேடும் பணி

அப்போது பழமையான அம்மன் சிலையை ஆற்றில் வீசியதால் தான், பருவமழை பொய்த்து, ஊரில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வீசப்பட்ட அம்மன் சிலையை மீட்டு வந்து மீண்டும் கோவிலில் வைத்து வழிபாடு செய்தால் மட்டுமே மழைபெய்து ஊர் செழிக்கும் என்று அருள்வாக்கு கூறியுள்ளனர். தற்போது வைகாசி திருவிழா நடத்த ஏற்பாடுகளை கிராம மக்கள் சமீபத்தில் தொடங்கினர். இதையொட்டி காவிரி ஆற்றில் வீசப்பட்ட சாமி சிலையையும் மீட்க முடிவு செய்த கிராம மக்கள் கடந்த 10 நாட்களாக சாமி சிலையை ஆற்றில் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்கள் சாமியாடி கூறிய இடத்தில் சாமி சிலையை தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இதையடுத்து கிணற்றில் இறங்கி தொலைந்து போன பொருட்களை எடுக்கும் வீரர்கள் சிலர் நேற்று கரூரில் இருந்து வரவழைக்கப்பட்டனர். ஆக்சிஜன் சிலிண்டருடன் கூடிய உபகரணங்களுடன் அவர்கள் பரிசலில் ஆற்றுக்குள் சென்று குறிப்பிட்ட இடத்தில் இறங்கி தேடினர்.

ஏமாற்றம்

மாலை 6.30 மணி வரை தேடியும் சிலை கிடைக்கவில்லை என்பதால் நேற்றுடன் சாமி சிலையை தேடும் பணியை கிராம மக்கள் கைவிட்டனர். குறிப்பாக கதவணை மின்நிலையத்தில் தண்ணீர் தேக்க ஆற்றில் கூடுதல் நீர்வரத்து ஏற்பட்டுள்ளதால் சாமி சிலையை தேடும் பணியை இதற்கு மேல் தொடரமுடியாத நிலை உருவாகி உள்ளது.

இதனால் 9 ஆண்டுகளுக்கு முன்பு காவிரி ஆற்றில் வீசிய சாமி சிலையை கடந்த 10 நாட்களாக ஆற்றில் தேடியும் கிடைக்காததால் கிராம மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Next Story