பலத்த மழை எதிரொலி மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி சாவு


பலத்த மழை எதிரொலி மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி சாவு
x
தினத்தந்தி 6 Jun 2019 3:30 AM IST (Updated: 6 Jun 2019 2:25 AM IST)
t-max-icont-min-icon

முத்துப்பேட்டையில் பலத்த மழை காரணமாக மின்சாரம் தாக்கி கணவன்-மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை சித்தேரிகுளம் பகுதியை சேர்ந்தவர் நாகரத்தினம்(வயது 65). கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி வீரம்மாள்(55). இவர்களுக்கு ராஜாராமன் என்ற மகனும், சரண்யா என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

ராஜாராமன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இதனால் நாகரத்தினம், அவருடைய மனைவி வீரம்மாள் மற்றும் மருமகள் காயத்ரி ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு நாகரத்தினமும், வீரம்மாளும் வீட்டின் திண்ணையில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மின்சாரம் தாக்கியது

அப்போது வீரம்மாள், இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டின் எதிர்புறம் உள்ள ஒதுக்குபுறமான இடத்துக்கு சென்றார். அப்போது அவர் அங்கிருந்த இரும்பு முள்வேலி கம்பியை பிடித்தார். இரும்பு முள்வேலியில் பாய்ந்திருந்த மின்சாரம் வீரம்மாளை தாக்கியது. இதனால் அலறி துடித்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

வீரம்மாளின் அலறல் சத்தம் கேட்டு அங்கு ஓடி வந்த நாகரத்தினம் மனைவியை காப்பாற்ற முயன்றார். அப்போது அவரையும் மின்சாரம் தாக்கியது. இதனால் நாகரத்தினமும் சம்பவ இடத்திலேயே இறந்தார். தனது மாமனார்-மாமியார் இருவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை கண்டு காயத்ரி கதறி அழுதார்.

விசாரணை

மின்சாரம் தாக்கி கணவன்- மனைவி இறந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று அப்பகுதியில் மின் வினியோகத்தை துண்டித்தார். மழை பெய்தபோது வீட்டின் மின் இணைப்பின் எர்த் கம்பியில் இருந்து மின்சாரம் இரும்பு முள்வேலியில் பாய்ந்திருந்ததும் இதை எதிர்பாராதவிதமாக வீரம்மாள் தொட்டதால் அவரை மின்சாரம் தாக்கியதும், அவரை காப்பாற்ற முயன்ற நாகரத்தினமும் இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story