முதலமைச்சரின் பதிவு அரசியலாக்கப்பட்டதால் நீக்கம் - அமைச்சர் ஜெயக்குமார்
விருப்ப மொழி பட்டியலில் தமிழை இணைக்கக்கோரிய முதலமைச்சரின் டிவிட்டர் பதிவு அரசியலாக்கப்பட்டதாலேயே நீக்கப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.
சென்னை,
சென்னை பட்டினப்பாக்கத்தில் அமைச்சர் ஜெயக்குமார் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மொழி விஷயத்தில் ஒருமித்த கருத்து இருக்க வேண்டும். நீட் தேர்வு தோல்வியால் மாணவிகள் தற்கொலை செய்து கொண்டது வேதனை அளிக்கிறது. தற்கொலை என்பது தீர்வல்ல.
கர்நாடகம், ஆந்திரா, டெல்லி போன்ற மாநிலங்களில் தமிழை விருப்ப மொழியாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் முதலமைச்சருக்கு வந்தன.
முதலமைச்சரின் சமூக வலைதள பதிவு அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. தமிழ் பிற மாநிலங்களிலும் ஒலிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் போடப்பட்ட பதிவு அது. தமிழை மற்ற மாநிலங்களில் படிக்கக் கூடாதா? இந்தி தொடர்பான சர்ச்சையை தவிர்ப்பதற்காகவே டிவிட்டரில் பதிவிட்ட கருத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நீக்கினார்.
எந்த வடிவத்திலும் இந்தியை தமிழகம் ஏற்காது. இதுதான் அரசின் கொள்கை. இருமொழிக் கொள்கையில் இருந்து பின்வாங்க மாட்டோம். மொழிக் கொள்கையில் எந்தவித மாறுபாடும் இல்லை என கூறினார்.
Related Tags :
Next Story