தமிழகத்தில் நிபா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - விஜயபாஸ்கர்


Minister of Health  Vijaya baskar
x
Minister of Health Vijaya baskar
தினத்தந்தி 6 Jun 2019 12:33 PM IST (Updated: 6 Jun 2019 12:33 PM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் நிபா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

திருச்சி,

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு நிபா வைரஸ் பரவியதில் 17 பேர் உயிரிழந்தனர். அவர்களில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்த செவிலியரும் உயிரிழந்தார். இந்த நிலையில், தற்போது மீண்டும் கொச்சியில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி பொதுமக்களை பீதியில் ஆழ்த்தி வருகிறது.

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்  திருச்சி விமான நிலையத்தில்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை.  முதல்வர் அறிவுறுத்தலின் பேரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கேரள எல்லையில் உள்ள 7 மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. 7 மாவட்டங்களில் நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், தேனி உள்ளிட்ட கேரள எல்லையோர மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருபவர்களை கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிபா அறிகுறிகள் என்ன எனக்கேட்டு வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு மருத்துவக் கட்டுப்பாட்டு அறையில் இருந்து உரிய முறையில் விளக்கம் அளிக்கப்படுகிறது.

மருத்துவ படிப்பிற்கான ஆன்லைன் விண்ணப்பங்களை நாளை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறினார். மேலும்,  பழங்களை தண்ணீரில் கழுவி சாப்பிட வேண்டும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தி உள்ளார்.

Next Story