ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? - சென்னை ஐகோர்ட்
இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது? என சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சென்னை,
சென்னையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதையும். சீட் பெல்ட் அணிவதையும் கட்டாயமாக்கி விபத்துகளை தவிர்க்க வலியுறுத்தி சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பிரமணிய பிரசாத் மற்றும் மணிக்குமார் ஆகியோர் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் விபத்தில் உயிரிழப்பதை தவிர்க்க காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க போக்குவரத்து காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்களை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டனர்.
அதன்படி நீதிமன்றத்தில் ஆஜரான காவல்துறை இணை மற்றும் துணை ஆணையர்களிடம், ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள் மீது காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் திருப்தியளிக்கவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த தமிழக அரசு, ஹெல்மெட் அணியாதது தொடர்பாக 4 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது என சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்தது. ஹெல்மெட் அணியாதவர்களுக்கு ரூ.100 மட்டுமே அபராதம் விதிக்கப்படுகிறது.
ஹெல்மெட் அணியாமல் பயணிப்பவர்களின் அபராத தொகையை அதிகரிக்க நீதிபதிகளிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களில் ஒருவர் கூட ஹெல்மெட் அணியவில்லை. ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும் . ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதியை ஏன் கண்டிப்புடன் தமிழகத்தில் அமல்படுத்த முடியவில்லை ? பெங்களூரு, டெல்லி போன்ற பெருநகரங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்கிற விதி கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. பெங்களூரு, டெல்லியில் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் ஏன் முடியவில்லை. இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் செல்பவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது? ஹெல்மெட் அணியாத காவல் துறையினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்
இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை தமிழக அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதே போல் 3 வது முறையாக விதிகளை மீறுபவர்களின் உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என்ற சட்ட விதியை கண்டிப்புடன் பின்பற்றவும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.
Related Tags :
Next Story