ஜூன் 12–ந்தேதி நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிக்கை


ஜூன் 12–ந்தேதி நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு மு.க.ஸ்டாலின் அறிக்கை
x
தினத்தந்தி 7 Jun 2019 12:15 AM IST (Updated: 6 Jun 2019 11:14 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் முதல் ராமேசுவரம் வரை ஜூன் 12–ந்தேதி நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, 

விழுப்புரம் முதல் ராமேசுவரம் வரை ஜூன் 12–ந்தேதி நடைபெறும் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான மனித சங்கிலி போராட்டத்துக்கு தி.மு.க. ஆதரவு தெரிவிப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

ஹைட்ரோ கார்பன் திட்டம் 

காவிரி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கி தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அடியோடு அழிக்கும் வகையில் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களை மத்திய பா.ஜ.க. அரசும், அதற்கு எடுபிடியாக இருக்கும் அ.தி.மு.க. அரசும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகின்றன.

ஜனநாயக ரீதியில் எதிர்ப்புத் தெரிவித்து அறவழியில் போராடுபவர்களை கைது செய்தும், காவல்துறை மூலம் அடக்குமுறையை ஏவி விட்டும் அராஜகம் செய்து வருகிறது. இந்த மக்கள் விரோத ஹைட்ரோ கார்பன் திட்டங்களை எதிர்த்து விவசாயிகளும், பொதுமக்களும் தன்னெழுச்சியாக போராடி வருகிறார்கள்.

மனித சங்கிலி போராட்டம் 

இந்நிலையில், நம்மாழ்வாரால் தொடங்கப்பட்ட பேரழிப்பிற்கு எதிரான பேரியக்கம் சார்பில் வருகின்ற ஜூன் 12–ந்தேதி மாலை 5.30 மணி முதல் 6 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், காரைக்கால், நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் வரை 596 கிலோ மீட்டருக்கு மாபெரும் மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தப் போவதாக அறிவித்து, அந்த போராட்டத்திற்கு தி.மு.க.வின் ஆதரவினை கேட்டிருக்கிறார்கள்.

ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட பல்வேறு பேரழிவுத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாடு விவசாயிகளின் உரிமையை மீட்டு எடுக்கவும், விளைநிலங்களை காப்பாற்றவும் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் ஆங்காங்கே உள்ள தி.மு.க. மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகள், தொண்டர்களும் பெருந்திரளாக பங்கேற்று விவசாயிகளின் வேதனை குரலை மத்திய–மாநில அரசுகளுக்கு உணர்த்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story