புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் குடும்பத்தினருக்கு ரூ.28 லட்சம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்


புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் குடும்பத்தினருக்கு ரூ.28 லட்சம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்
x
தினத்தந்தி 7 Jun 2019 5:00 AM IST (Updated: 7 Jun 2019 12:19 AM IST)
t-max-icont-min-icon

தீவிரவாதிகளின் புல்வாமா தாக்குதலில் உயிர் இழந்த மத்திய ரிசர்வ் காவல் படை வீரர்கள் குடும்பத்தினருக்கு ரூ.28 லட்சத்தை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

சென்னை,

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14–ந் தேதியன்று தீவிரவாதிகள் நிகழ்த்திய பயங்கர தாக்குதலில், மத்திய ரிசர்வ் காவல் படையினர் பலர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சவலப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதியின் மகன் ஜி.சுப்பிரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம், கார்குடியைச் சேர்ந்த சின்னையனின் மகன் சி.சிவசந்திரன் ஆகிய இரண்டு வீரர்கள் உயிர் இழந்தனர்.

இந்த செய்தியை அறிந்து தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு, அக்குடும்பங்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிப்ரவரி 15–ந் தேதியன்று உத்தரவிட்டார்.

பணி நியமன ஆணை 

உயிர் இழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன் மற்றும் சிவசந்திரன் ஆகியோரது குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா 20 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.

உயிர் இழந்த ஜி.சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி மற்றும் சி.சிவசந்திரனின் மனைவி காந்திமதி ஆகியோருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த பிப்ரவரி 27–ந் தேதியன்று வழங்கினார்.

தலா ரூ.14 லட்சம் 

தீவிரவாதிகளின் தாக்குதலில் உயிர் இழந்த மத்திய பாதுகாப்புப் படை வீரர்கள் சுப்பிரமணியன், சிவசந்திரன் ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையிலும், அக்குடும்பத்தினருக்கு உதவிடும் வகையிலும், கிருஷ்ணவேணி மற்றும் காந்திமதி ஆகியோருக்கு தலா 14 லட்சம் ரூபாய் வீதம், மொத்தம் 28 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார்.

இந்த நிகழ்வின்போது, காவல்துறை தலைமை இயக்குனர் டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story