24 மணி நேரமும் கடைகளை திறந்து வைக்கலாம் தமிழக அரசு அறிவிப்பு
தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையிலும், 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை,
தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்திலும் மத்திய அரசு சட்ட மசோதா ஒன்றை உருவாக்கி மாநில அரசுகளுக்கு அனுப்பி வைத்தது.
தமிழக அரசு அனுமதி
கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை நாள் முழுவதும் திறந்து வைக்க இந்த மசோதா அனுமதி வழங்குகிறது. தங்கள் தேவைக்கு ஏற்ப இந்த சட்ட அனுமதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இதைத்தொடர்ந்து, இதுபற்றி தீவிரமாக ஆலோசித்து வந்த தமிழக அரசு, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க தற்போது அனுமதி வழங்கி உள்ளது.
இதுகுறித்து தமிழக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை முதன்மைச் செயலாளர் சுனில் பாலிவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
வேலைவாய்ப்பு
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு துறை செயலாளர், கடைகள் மற்றும் நிறுவனங்கள் (வேலைவாய்ப்பு ஒழுங்குமுறைகள் மற்றும் சேவைகளில் கட்டுப்பாடுகள்) என்ற 2016-ம் ஆண்டுக்கான மாதிரி மசோதா ஒன்றை அனுப்பி இருந்தார்.
இந்த மசோதா மீது தொழிலாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள், சங்கங்கள் மற்றும் மாநில அரசுகளின் கருத்துகள் கேட்கப்பட்டன என்றும், அந்தந்த மாநிலங்கள் அங்குள்ள உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப அதை திருத்தி சட்டமாக்கிக் கொள்ளலாம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நாடு முழுவதும் பணி நிலைகளில் சமமான கட்டுப்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும், தொழிலை ஊக்குவிப்பதோடு அதனுடன் வேலைவாய்ப்பையும் அதிகரிக்கச் செய்யும் நோக்கத்தில் இந்த மசோதா தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும் மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.
தொழிலாளர் நலன்
மேலும், ஆண்டு முழுவதும் கடைகள், நிறுவனங்களை திறந்து வைக்கும் நேரம், மூடும் நேரம் ஆகியவற்றுக்கு இந்த மசோதா முழு சுதந்திரம் வழங்குகிறது. அதோடு, பாதுகாப்பு, கழிவறை, பெண்களின் கண்ணியத்துக்கு பாதுகாப்பு, அவர்களின் போக்குவரத்து வசதி போன்றவை அளிக்கப்படும் நிலையில் பெண்களுக்கு இரவு நேரப் பணிகள் வழங்கலாம்.
பெண்களை வேலையில் சேர்ப்பது, பயிற்சி வழங்குவது, பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் செய்வதில் பாலின பாகுபாடு காட்டக்கூடாது என்றும், பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலனுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டு உள்ளது.
24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி
இதுகுறித்து அரசுக்கு தமிழக தொழிலாளர்கள் ஆணையர் கடிதம் எழுதி உள்ளார். அதில், ஆரம்பமாக 3 ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்களை திறக்க அனுமதிப்பது குறித்த முன்மொழிவை தெரிவித்து இருக்கிறார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் 1947-ல் திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களை, 3 ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் திறந்து வைக்க நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுகிறது.
8 மணி நேர பணி
அதன்படி, பணியாளருக்கு வாரம் ஒரு நாள் சுழற்சி முறையில் விடுமுறை அளிக்க வேண்டும். ஒவ்வொரு நிறுவனத்திலும் அனைவருக்கும் தெரியும் இடத்தில் பணியாளர்களின் விவரங்கள் வைக்கப்பட வேண்டும். அவர்களின் விடுமுறை பற்றிய தகவல்களும் தெரிவிக்கப்பட வேண்டும்.
சம்பளம், கூடுதல் நேர பணிக்கான சம்பளம் போன்றவை வேலையாளின் வங்கி வைப்பு கணக்குக்கு அனுப்பப்பட வேண்டும். நாளொன்றுக்கு 8 மணிநேரத்துக்கு மேல் மற்றும் வாரம் ஒன்றுக்கு 48 மணி நேரத்துக்கு மேல் பணி அளிக்கக்கூடாது.
கூடுதல் பணி அளித்தால் அது நாளொன்றுக்கு 10.30 மணி நேரத்துக்கு மேல், வாரத்துக்கு 57 மணி நேரத்துக்கு மேல் நீடிக்கக்கூடாது. கூடுதல் பணி நேரம் அளிக்காத நிலையில் பணியாளர் யாராவது வேலை செய்வது கண்டறியப்பட்டால் வேலை அளித்தவர் அல்லது மேலாளருக்கு தண்டனை விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண் ஊழியர் பாதுகாப்பு
பொதுவான காலகட்டங்களில் பெண் ஊழியர்கள் இரவு 8 மணிக்கு மேல் பணியாற்ற தேவை இல்லை. பெண் பணியாளரிடம் எழுத்துப்பூர்வமான ஒப்புதல் பெற்ற பிறகே, அவருக்கு போதிய பாதுகாப்பு அளித்து இரவு 8 மணி முதல் மறுநாள் காலை 6 மணிவரை பணியாற்ற அனுமதிக்கலாம்.
‘ஷிப்டு’ முறையில் பணியாற்றும் பெண்களுக்கு போக்குவரத்து வசதி செய்துதரப்பட வேண்டும். இந்த வசதி குறித்து நிறுவனத்தின் பிரதான வாசலில் நோட்டீஸ் ஒட்டப்பட்டிருக்க வேண்டும். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை விசாரிப்பதற்கான குழுவை, நிறுவன உரிமையாளர் அமைக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று மீறப்பட்டாலும், அது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story