‘நிபா’ வைரஸ் தடுப்பு நடவடிக்கை: தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரம் வாகனங்களில் வருவோருக்கு மருத்துவ பரிசோதனை
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
செங்கோட்டை,
நிபா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழக-கேரள எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவில் இருந்து வாகனங்களில் வருவோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
‘நிபா’ காய்ச்சல்
கேரளா மாநிலத்தில் கடந்த ஆண்டு ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் பரவியதில் பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போதும் கேரளா மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் ‘நிபா‘ வைரஸ் பரவாமல் தடுக்க, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து உள்ளது.
தமிழகத்தில் இந்த காய்ச்சல் பரவினால், பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
எல்லையில்
தீவிர கண்காணிப்பு
இதையடுத்து ‘நிபா‘ காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக, நெல்லை மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையான புளியரை சோதனைச்சாவடியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவ அதிகாரிகள், சுகாதார ஆய்வாளர்கள் உள்ளிட்ட குழுவினர் புளியரை சோதனைச்சாவடியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரள மாநிலத்தில் இருந்து அந்த வழியாக வாகனங்களில் வருவோருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது. கேரள மாநிலத்தில் உள்ள தோட்டங்களில் கூலி வேலைக்கு சென்று வரும் தமிழக தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
கிருமி நாசினி தெளிப்பு
மேலும் நிபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்படுகிறது. செங்கோட்டை பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் காய்ச்சலால் யாரேனும் பாதிக்கப்பட்டு உள்ளனரா?, மேலும் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் யாரேனும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனரா? எனவும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டு உள்ளது. கேரள மாநிலம் வழியாக நெல்லைக்கு வரும் ரெயில்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது.
Related Tags :
Next Story