தேர்தலில் திடீர் திருப்பம் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டி
நடிகர் சங்க தலைவர் தேர்தலில் திடீர் திருப்பமாக, தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து பாக்யராஜ் போட்டியிடுகிறார்.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது.
நடிகர் சங்க தேர்தல்
கடந்த தேர்தலில் வென்ற நிர்வாகிகளின் பதவி காலம் செப்டம்பர் மாதம் முடிவடைந்தது. நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை ஆறு மாதத்திற்கு தள்ளி வைத்தனர். தற்போது தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன. தேர்தல் அதிகாரியாக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.
வருகிற 23-ந் தேதி சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். போட்டியில் இருந்து விலக விரும்புவோர் தங்கள் மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியிடப்படும்.
நாசர், விஷால் மீண்டும் போட்டி
இந்த தேர்தலில் நடிகர் விஷாலின் ‘பாண்டவர் அணி’ மீண்டும் போட்டியிடுகிறது. இந்த அணியின் சார்பில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். இதேபோல் கார்த்தி பொருளாளர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.
ஏற்கனவே துணைத் தலைவராக இருந்த பொன்வண்ணன், இந்த தேர்தலில் நிற்கவில்லை. துணைத் தலைவர் பதவிகளுக்கு கருணாஸ், பூச்சி முருகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இந்த அணியின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் பட்டியலும் வெளியிடப்பட்டு உள்ளது.
பாக்யராஜ் போட்டி
இந்த அணியை எதிர்த்து யார்-யார் போட்டியிடுவார்கள் என்பது தெரியாமல் இருந்தது. நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், கார்த்தி பொருளாளராகவும் போட்டியின்றி ஒரு மனதாக தேர்ந்து எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.
இந்தநிலையில் நேற்று திடீர் திருப்பம் ஏற்பட்டது. விஷால் அணியை எதிர்த்து பாக்யராஜ் தலைமையில் புதிய அணி களம் இறங்குகிறது.
நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடுவதாக பாக்யராஜ் அறிவித்து உள்ளார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் போட்டியிடுகிறார். துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு உதயா, குட்டி பத்மினி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் நடிகர் சங்க தேர்தல் பரபரப்பாகி உள்ளது.
காரசார அறிக்கை
பாக்யராஜ் தமிழ் படஉலகில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் இருந்தவர். தற்போது தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். ஏற்கனவே பாக்யராஜூக்கும், முன்னாள் திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் விசுவுக்கும் அறக்கட்டளை பணம் தொடர்பாக மோதல் ஏற்பட்டது.
இருவரும் காரசாரமாக அறிக்கை விட்டனர். போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் அளிக்கப்பட்டது. தற்போது நடிகர் சங்க தலைவர் பதவிக்கும் பாக்யராஜ் போட்டியிடுகிறார்.
Related Tags :
Next Story