நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து போராடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை
நீட் தேர்வை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் தி.மு.க. தொடர்ந்து போராடும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொடூர ஆயுதம்
மாணவ-மாணவியருக்கும் அவர்களின் பெற்றோருக்கும் கடும் மன அழுத்தத்தையும், உளைச்சலையும் தரும் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வான நீட், சமூக நீதியைச் சிதைக்கும் கொடூர ஆயுதமாக இருக்கிறது என்பதை இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வின் முடிவுகளும் நிரூபிக்கின்றன. கடந்த ஆண்டைவிட இம்முறை நீட் தேர்வு எழுதிய தமிழக மாணவ-மாணவியரின் தேர்ச்சி சதவீதம் கட்டாயத்தின் காரணமாக உயர்ந்திருந்தாலும், அவர்களில் எத்தனை பேருக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்கிற கேள்விக்கு திருப்திகரமான பதில் இல்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 2007-ல் தி.மு.க. ஆட்சியில் மருத்துவம் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்பட்டு, அதற்கான சட்டம் ஜனாதிபதி ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக, பிளஸ்-2 மார்க் அடிப்படையில் கிராமப்புற ஏழை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, டாக்டர்களாகினர். தற்போது அந்த சமூக நீதி தகர்க்கப்பட்டுள்ளது. மாநிலக் கல்வி வழியிலான அரசுப் பள்ளிகளில் படித்தோருக்கும் வாய்ப்பு வெகுவாகக் குறைந்துள்ளது.
நீட் பலிகள்
கிராமப்புற ஏழை ஒடுக்கப்பட்ட மாணவர்கள் அதிகம் பயில்வது மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தான். அவர்களின் மருத்துவக்கனவை நீட் தேர்வு முற்றிலுமாக சிதைத்து ஒழித்து விட்ட காரணத்தால்தான் அரியலூர் அனிதா, விழுப்புரம் பிரதீபா எனத் தொடங்கிய நீட் பலிகள், இந்த ஆண்டு திருப்பூர் ரிதுஸ்ரீ, பட்டுக்கோட்டை வைஷ்யா, மரக்காணம் மோனிஷா என அதிகரித்துக் கொண்டே போகும் அவலமும், அபாயமும் மிகுந்த கட்டத்தை அடைந்துள்ளது. வளர்ச்சி பெற்ற மேலை நாடுகளில்கூட இத்தகைய கடுமையான நுழைவுத் தேர்வு முறைகளினால் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் கணக்கில் கொண்டு அவற்றைக் கைவிட்ட வரலாறு உண்டு.
இங்கிலாந்து நாட்டில் தேசிய நுழைவுத்தேர்வின் மூலம் தேர்ச்சி பெற்று, ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரிகளில் சேர்பவர்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் 100-க்கு ஒருவர் என்ற விகிதத்திலும், தனியார் பள்ளி மாணவர்கள் 20-க்கு ஒருவர் என்ற அளவிலும் இருந்தன. இதனைத் தொடர்ச்சியாகக் கவனித்த இங்கிலாந்து அரசுத் துறையினர், தேசிய நுழைவுத் தேர்வினால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஏழ்மையானோருக்கும், பின்தங்கிய பிரிவினருக்கும் ஆக்ஸ்போர்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்லூரிகளில் இடமளிக்கப்படுவதில்லை, அதற்கான முயற்சிகளையும் மேற்கொள்வதில்லை என்பதை புள்ளிவிவரங்களுடன் அறிந்து, அந்தத் தேர்வை ரத்து செய்ததுடன், சமூக மேம்பாட்டின் அடிப்படையில் இடங் களை வழங்குவதற்கான முறைகளைக் கண்காணிக்கத் தொடங்கினர்.
கனவை சிதைக்கிறது
நம் நாட்டிலும் நகர்ப்புறம் சார்ந்த மேல்தட்டு வகுப்பினரின் பிள்ளைகள் பயிலும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை மட்டும் கருத்திற்கொண்டு, ஏழ்மையைச் சுமந்து கொண்டு எளிய சூழலில் மாநிலப் பாடத்திட்டத்திலான அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குத் தேர்வு நடத்துவது என்பது சரியான ஒப்பீட்டு முறையாக இருக்காது. அது சமநிலை அற்றது, சமத்துவம் மற்றும் சமநீதி போன்றவற்றைத் தவிர்த்திடக் கூடியது.
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகப்படுத்தி, எளிய மாணவ-மாணவியரின் மருத்துவக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கிறது நீட் தேர்வு. அத்துடன், மாநிலக் கல்வி முறையையும் சீரழிக்கிறது. கல்வியை, பொதுப்பட்டியலில் இருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரும்போது தான் இத்தகைய ஏற்றத்தாழ்வுகள் நீங்கும். சொந்த மாநிலத்தில் மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறும். முக்கியமாகச் செய்ய வேண்டிய அதை விடுத்து முன்னேறிய பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசு தேவையில்லாத வேகம் காட்டுவது சமூக ஏற்றத்தாழ்வுகளை அதிகமாக்கிவிடும்.
மத்திய அரசின் கடமை
அதனால், நீட் தேர்வை ரத்து செய்வதற்கான சட்டப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொண்டு, நீட் தேர்வே இல்லாத நிலையை உருவாக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும். அனைத்து மாநிலங்களின் நலனும் பாதுகாக்கப்படும் என்கிற மோடி அரசு, தமிழ்நாட்டு மக்கள் நீட் தேர்வு ரத்து என்கிற வாக்குறுதிக்கு ஆதரவாக வாக்களித்திருப்பதை மனதில் கொண்டு, செயல்பட வேண்டியது கட்டாயமாகிறது.
நீட் தேர்வை ரத்து செய்யவும், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வரவும் தி.மு.க., நாடாளுமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் தொடர்ந்து பாடுபடும்; போராடும்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story