அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சி; கோஷ்டி பூசல் இல்லை: முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டி
அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சி என்றும் கட்சியில் கோஷ்டி பூசல் என்பது இல்லை என்றும் முதல் அமைச்சர் பழனிசாமி பேட்டியளித்து உள்ளார்.
சேலத்தில் ஆவணி பேரூர் பகுதியில் சரபங்கா நதியின் குறுக்கே கட்டப்பட்ட உயர்மட்ட பாலம் மற்றும் அரசு அலுவலக கட்டிடங்களை முதல் அமைச்சர் பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.
இதன்பின் அவர் பேசும்பொழுது, சரபங்கா நதியின் குறுக்கே பாலம் திறக்கப்பட்டதால், ஒன்றரை கி.மீட்டர் சுற்றி சென்ற மருத்துவமனைக்கு தற்போது இரண்டு பாலங்கள் கடந்தால் போதும். ரூ.1.90 கோடி மதிப்பில் பாலம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. சேலம் ஜலகண்டாபுரம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், மக்கள் வைக்கும் கோரிக்கையின்படியே பாலங்கள் கட்டப்படுகின்றன. திறப்பு விழாவில் குற்றச்சாட்டு கூறவேண்டுமென்ற நோக்கத்திலேயே தி.மு.க.வினர் கலந்து கொண்டுள்ளனர். சேலத்தில் தேவையில்லாத இடத்தில் பாலம் கட்டப்பட்டு உள்ளது எங்கே? என தி.மு.க. எம்.பி.க்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
மேம்பால பணிகள் அனைத்தும் உடனடியாக முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்படுகிறது. யாருக்கும், எவ்வித பிரச்னையும் இன்றி பாலம் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் கட்டப்பட்ட புதிய ஈரடுக்கு மேம்பாலத்தினால் மக்களின் போக்குவரத்து சிரமம் குறைந்திருக்கிறது. இதனால் 35 சதவீத போக்குவரத்து நெரிசல் குறையும். மாணவர்கள், நோயாளிகள் அதிக பலனடைவார்கள். நில எடுப்பினால் மக்கள் பாதிக்கப்படாத வகையில் பாலங்கள் கட்டப்படுகின்றன.
தேர்தலின்பொழுது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. உயிரிழப்பினை தடுக்க, எரிபொருள் சிக்கனம், சுற்றுச்சூழலை பாதுகாக்க மத்திய அரசு 8 வழிச்சாலை திட்டத்தினை கொண்டு வந்துள்ளது.
அ.தி.மு.க.வில் கோஷ்டி பூசல் என்பது தவறான தகவல். அ.தி.மு.க. பலம் பொருந்திய கட்சியாக உள்ளது. அ.ம.மு.க.விற்கு சென்றவர்கள் அ.தி.மு.க.விற்கு திரும்பி வருகின்றனர். தொண்டர்களால் ஆளப்படும் கட்சி அ.தி.மு.க. என அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க. வலிமைமிக்க இயக்கம். இந்த இயக்கம் பல்வேறு திட்டங்களை மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. ராஜன் செல்லப்பா பேசியது குறித்த முழு விவரங்களை பார்த்த பிறகே பதிலளிக்க முடியும். உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் நடந்து வருகின்றன என கூறினார்.
Related Tags :
Next Story