நின்ற லாரி மீது கார் மோதியதில் தாய், மகன் உள்பட 3 பேர் பலி
சிறுபாக்கம் அருகே நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் தாய், மகன் உள்பட 3 பேர் பலியானார்கள்.
கடலூர்,
சேலம் குகை பி.ஜி.ஆர். லைன் ரோடு பகுதியை சேர்ந்தவர் அப்துல்சலிம் மகன் அகமதுசரீப் (வயது 26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கார் கம்பெனியில் உதவி மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவருடைய தாய் சிராஜ்நிஷா (50), தங்கை அசீராபி (22), தம்பி சுமயா (23).
இந்த நிலையில் அகமது சரீப் தனது குடும்பத்துடன் நாகூர் தர்காவிற்கு செல்ல திட்டமிட்டார். அதன்படி, நேற்று முன்தினம் அகமதுசரீப், சுமயா, சிராஜ்நிஷா, அசீராபி மற்றும் உறவினர் சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்த கவுஸ்மைதீன் மனைவி நஜிமாபானு (56) ஆகியோர் ஒரு காரில் புறப்பட்டனர். காரை அகமது சரீப் ஓட்டிச் சென்றார்.
லாரி மீது கார் மோதல்
நாகூர் சென்ற அவர்கள் அங்குள்ள தர்காவில் தொழுகை நடத்தினர். பின்னர் இரவு அங்கிருந்து புறப்பட்டனர். அந்த கார் நள்ளிரவு 1 மணிக்கு கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் அருகே சேலம்-விருத்தாசலம் சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே சென்ற போது முன்னால் சாலையில் ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரி மீது அகமதுசரீப் ஓட்டிச் சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் முற்றிலும் உருக்குலைந்தது.
இந்த விபத்தில் அகமதுசரீப், சிராஜ்நிஷா, நஜிமாபானு ஆகியோர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அசீராபி, சுமயா ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்து உயிருக்கு போராடி கிடந்தனர்.
சிகிச்சை
விபத்து பற்றி தகவல் அறிந்த சிறுபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story