ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டுவர குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு


ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரெயிலில் தண்ணீர் கொண்டுவர குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 9 Jun 2019 3:15 AM IST (Updated: 9 Jun 2019 1:10 AM IST)
t-max-icont-min-icon

ரெயிலில் தண்ணீர் கொண்டு வருவது தொடர்பாக ஜோலார்பேட்டையில் சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னை, 

மேட்டூர் குடிநீர் திட்டத்தின் மூலம் வேலூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர், வேலூர் மற்றும் அரக்கோணம் ஆகிய நகரங்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது.

கூட்டு குடிநீர்

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் ஜோலார்பேட்டைக்கு சென்று பல்வேறு கோணங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இதுகுறித்து சென்னைக்கு எப்போது ரெயிலில் தண்ணீர் கொண்டு வரப்படும்? என்று அதிகாரிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறியதாவது:-

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தின் அருகில் கூட்டு குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. அதில் இருந்து ரெயிலில் உள்ள டேங்கர்களில் தண்ணீர் ஏற்றப்பட்டு சென்னைக்கு கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. முதல் கட்டமாக ஜோலார்பேட்டையில் இருந்து 25 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வர திட்டமிடப்பட்டது. இதற்காக தினசரி 12 நடைகள் சென்று வர வேண்டி உள்ளது.

ரெயிலில் கொண்டு வர திட்டம்

ஜோலார்பேட்டையில் உள்ள காவிரி கூட்டு கூடிநீர் திட்டத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் யாட் பகுதி வரை இரும்பு குழாய்கள் பதிக்க வேண்டியிருக்கிறது. ரெயில்வே வளாகத்தில் ரெயில்வே ஊழியர்கள் தான் குழாய் பதிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதுகுறித்த ஆரம்ப நிலை ஆய்வுகள் நடந்து வருகிறது. ஆனால் தற்போது சென்னையில் 525 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் கையிருப்பு தண்ணீரை முழுமையாக வினியோகம் செய்ய திட்டமிட்டு உள்ளோம். அத்தியாவசியம் ஏற்பட்டால் ஜோலார்பேட்டையில் இருந்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து பின்னர் தான் முடிவு செய்யப்படும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story