‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டால் தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை


‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டால் தான் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் டாக்டர் ராமதாஸ் அறிக்கை
x
தினத்தந்தி 1 July 2019 4:35 AM IST (Updated: 1 July 2019 4:35 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு ரத்து செய்யப்பட்டால் தான் மருத்துவ படிப்பில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சமூக நீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எதிரான ‘நீட்’ தேர்வு சுப்ரீம் கோர்ட்டு அடிப்படையில் தான் நடத்தப்படுதாகவும், அது ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து வாதிடப்பட்டு வருகிறது. ஆனால், ‘நீட்’ தேர்வு நீடிக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் சுப்ரீம் கோர்ட்டால் கற்பிக்கப்படவில்லை என்பது தான் உண்மை.

‘நீட்’ தேர்வு ஒட்டுமொத்த தமிழகம் மற்றும் சமூகநீதிக்கு எதிரானது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. ‘நீட்’ தேர்வு காரணமாக 35 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைமை மீண்டும் ஏற்பட்டுள்ளது. ‘நீட்’ ரத்து செய்யப்பட்டால் தான் தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சமூகநீதியை நிலைநாட்ட முடியும்.

‘நீட்’ தேர்வு ரத்து என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று 2016-ம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட அமர்வு பிறப்பித்த ஆணை, ‘நீட்’ தேர்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கான இடைக்கால ஏற்பாடு தான். ஆனால், 3½ ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததும், இடைக்கால ஏற்பாடாக வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக் கொண்டு தொடர்ந்து ‘நீட்’ தேர்வு நடத்தப்படுவதும் அறமல்ல.

இத்தகைய சூழலில் ‘நீட்’ தேர்வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அந்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் வரை ‘நீட்’ தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story