அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு


அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்பட்டதாக ஆட்சியர் அறிவிப்பு
x
தினத்தந்தி 1 July 2019 8:24 PM IST (Updated: 1 July 2019 8:24 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சிபுரம் அத்திவரதரை, பக்தர்கள் நாளை முதல் இலவசமாக தரிசிக்கலாம் என ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.



காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் உள்ள அனந்தசரஸ் குளத்தில் இருக்கும் அத்திவரதர் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருக்குளத்தில் இருந்து எழுந்தருளி 48 நாட்கள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். கடந்த 1979-ம் ஆண்டுக்கு பிறகு அத்திவரதர் மீண்டும் இன்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 17-ந்தேதி வரை 48 நாட்கள் அருள்பாலிக்கிறார். இதையொட்டி அனந்தசரஸ் குளத்தில் இருந்து அத்திவரதர் சிலை கடந்த 27-ந்தேதி அதிகாலை எடுக்கப்பட்டது. பின்னர் கோவிலில் உள்ள வசந்த மண்டபத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு தைலக்காப்பு, சிறப்பு பூஜைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

பின்னர் நேற்று இரவு அத்திவரதருக்கு உடல் முழுவதும் தைலகாப்பு தடவப்பட்டு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. 40 ஆண்டுகளுக்கு பிறகு இன்று அதிகாலை 5 மணி முதல் அத்திவரதரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  இதனால் தமிழகம் மட்டும் இல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் காஞ்சீபுரத்தில் குவிந்த வண்ணம் உள்ளார்கள். இதனால் காஞ்சீபுரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பக்தர்கள் வரிசையாக சென்று சாமி தரிசனம் செய்ய தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இதற்காக இலவச தரிசனம், ரூ.50 கட்டண வரிசை, ரூ.500-க்கான தரிசனம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்துக்கான சிறப்பு வழி என அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்றது. இன்று காலை முதலே ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் அத்திவரதரை தரிசனம் செய்ய வசூலிக்கப்பட்ட ரூ.50 கட்டணம் ரத்து செய்யப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார். 


Next Story