ஆகஸ்டு 30-ந் தேதிக்குள் மாணவர்களுக்கு கல்வி தொகையை வழங்க வேண்டும் : ஐகோர்ட்டு உத்தரவு
ஆகஸ்டு 30-ந் தேதிக்குள் மாணவர்களுக்கு கல்வி தொகையை வழங்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டில், புஷ்பா, வெற்றிவேல் உள்பட 210 மாணவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘தமிழக அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையில், தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் சேரும் எஸ்.சி., எஸ்.டி. மாணவர்களுக்கு, அரசு நிர்ணயித்த கல்விக்கட்டணத்தை மட்டுமே வழங்க முடியும் என்று கூறியிருந்தது. இதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு 2017-18 கல்வியாண்டில் நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் கல்லூரியில் சேர்ந்த எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழு கல்விக்கட்டணத்தை வழங்க வேண்டும். 2018-19 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்களுக்கு புதிய அரசாணையின்படி கல்வி கட்டணம் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. ஆனால், இதுவரை 2017-18 கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் செலுத்திய கல்வி கட்டணத்தை அரசு திருப்பி வழங்கவில்லை’ என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் கந்தன்துரைசாமி, விஜய்ஆனந்த் உள்பட பலர் ஆஜராகி வாதிட்டனர். அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மாணவர்களின் விவரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. இந்த பணி முடிந்ததும், கல்விக்கட்டணம் வழங்கப்படும்’ என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதி, ‘2017-2018-ம் கல்வியாண்டு மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து வருகிற ஆகஸ்டு 30-ந் தேதிக்குள் அவருக்கு வழங்க வேண்டிய கல்விக் கட்டணத் தொகையை வழங்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story